இதோ... அதோ... என்று ஒருவழியாக உள்ளாட்சி தேர்தல், பல கட்டங்களாக முடிந்து, தமிழ்நாடு முழுக்க, ஊரக உள்ளாட்சி முதல், நகர் புற உள்ளாட்சி வரை மக்கள் பிரதிநிதிகளால் நிரம்பிவிட்டன. ஆண்டு கணக்கில் காலியாக இருந்த கவுன்சிலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மாநகராட்சிகளில், கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு, தற்போது மேயர் மற்றும் துணை மேயர் போட்டிக்கான வேட்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
10 மாநகராட்சிகளாக தேர்தலை சந்தித்த தமிழ்நாடு, நீண்ட... இடைவெளிக்குப் பின் அதிகரிக்கப்பட்டு 21 மாநகராட்சிகளாக தேர்தலை சந்தித்துள்ளது. 21 மேயர்கள் தமிழ்நாட்டில் ஓரிரு நாளில் பொறுப்பேற்க உள்ளனர். துணை மேயர்களும் அதே எண்ணிக்கையில் வருவார்கள். நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவரை விட மாநகராட்சி மேயர்களுக்கு அதீத ‛பவர்’ உண்டு. அப்படியென்றால் துணை மேயருக்கு என்ன பவர்? அனைத்தையும் பார்க்கலாம் வாங்க....
‛மாண்புமிகு மேயர் அவர்களே...’
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோரை மாண்புமிகு என்ற அடைமொழியோடு அழைப்பது வழக்கம். அது போல தான், மேயரை , மரியாதைக்குரிய மேயர் அல்லது வணக்கத்துக்குரிய மேயர் என்றே அழைத்து வந்தனர். பின்னாளில், அந்த அரசாணை மாற்றப்பட்டு, மேயரையும் மாண்புமிகு மேயர் என்று அழைக்கும் வழக்கம் கொண்டு வரப்பட்டது. மேயர் என்பவர், அந்த நகரின் முதல் குடிமகன். அவர் தான், அந்த நகரின் ஒட்டுமொத்த குரலாக அவர் இருப்பார், என்கிறது உள்ளாட்சி கட்டமைப்பு. இதோ மேயரின் அதிகாரங்கள் மற்றும் அவருக்கான சலுகைகள்:
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களின் கூட்டத்தை நடத்தும் பொறுப்பு மேயருக்கு உண்டு
- கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானங்களை மேயர் முன்வைப்பார்.
- பிறர் கொண்டு வரும் தீர்மானங்களை ஏற்பதும், தவிர்ப்பதும் மேயரின் விருப்பம்.
- மேயருக்காக பிரத்யேக அங்கி மற்றும் செங்கோல் வழங்கப்படும். கூட்டத்தில் அதனுடன் தான் மேயர் பங்கேற்பார்.
- ரூ.1 கோடி ரூபாய் வரையிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் உண்டு
- ஆனால், அந்த அதிகாரத்தை கவுன்சிலர்கள் கூட்டத்தின் ஒப்புதலில் பெற வேண்டும்.
- அவசரம் என்றால், கவுன்சிலர்கள் ஒப்புதல் பெறாமல் முன்ஒப்புதல் கொடுத்து திட்டங்களை செயல்படுத்த முடியும். பின்னர் ஒப்புதல் பெறலாம்.
- மேயருக்கு தனியாக ஊதியம் என்று எதுவும் இல்லை.
- மேயருக்கு மாநகராட்சி சார்பில் அவர் பதவிக்காலம் வரை வசிக்க பங்களா வசதி செய்து தரப்படும்
- மேயருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கார் வழங்கப்படும். அதற்கான எரிபொருளும் தரப்படும்
- ஆட்சியர், கோட்டாட்சியர் போல மேயருக்கும் ‛டவாலி’ ஒருவர் உடன் இருப்பார்
- மேயருக்கு மாநகராட்சி அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கப்படும்.
- மாநகராட்சி திட்டங்களுக்கு மேயரின் ஒப்புதல் மிக முக்கியம்
- அதே நேரத்தில் ஆணையரின் அதிகாரங்களும், மேயருக்கு இணையாக இருக்கும்.
மரியாதைக்குரிய துணை மேயர் அவர்களே...
துணை மேயரை பொருத்தவரை, அதிகார ரீதியாக, பொறுப்பு ரீதியாக அது ஒரு கவுரவ பதவியாகவே பார்க்கப்படுகிறது. என்னதான் அவர் துணை மேயராக இருந்தாலும், அவரது ஒப்புதல், சக கவுன்சிலர்களின் ஒப்புதலாகவே பார்க்கப்படும். பிறகு என்ன துணை மேயருக்கு பவர்? வாங்க பார்க்கலாம்...
- மாமன்ற கூட்டத்தில் மேயரின் அருகில் அமர்ந்து சபையில் பங்கேற்கலாம்.
- துணை மேயருக்கு மாநகராட்சி அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கப்படும்
- மேயர் போன்றே துணை மேயருக்கும் ‛டவாலி’ ஒருவர் நியமிக்கப்படுவார்
- துணை மேயருக்கு மாநகராட்சி சார்பில் பதவிக்காலம் வரை வசிக்க பங்களா வழங்கப்படும்
- துணை மேயருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கார் வழங்கப்படும். எரிபொருளும் தரப்படும்.
- துணை மேயருக்கு ஊதியம் கிடையாது
- மேயர் வெளியூர் சென்றால், அல்லது செயல்முடியாத காலத்தில் அவரது பொறுப்புகளை துணை மேயர் கவனிக்கலாம்.
மாநகராட்சியின் மக்கள் அதிகாரம் பெற்ற உள்ளாட்சி பொறுப்புகளை மேயரும், துணை மேயரும் பெறுகின்றனர். அதனால் தான், அந்த பொறுப்பை பெற கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.