சென்னை திரு.வி.க. நகரின் 74 ஆவது வார்டைச் சேர்ந்த இளம்பெண் பிரியா ராஜா சென்னை மேயராகிறார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னையில் 178 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த சூழலில் சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயர் யார் என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த பிரியா ராஜா சென்னை மேயராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இவர் வட சென்னை பகுதியான திருவிக நகரில் இருக்கும் 74வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
பிரியா ராஜா 28 வயதான எம்.காம். பட்டதாரி ஆவார். முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி இவர்.
தாரா செரியன், காமாட்சி ஜெயராமன் ஆகியோரை அடுத்து சென்னையின் 3ஆவது பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இவர் வட சென்னையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மேயர், முதல் தலித் பெண் மேயர்.
இதற்கு முன்பு தென் சென்னையைச் சேர்ந்தவர்களே திமுக சார்பில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வட சென்னையைச் சேர்ந்த இவர் தேர்ந்தெடுக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
வட சென்னையைச் சேர்ந்தவர் மேயராக அறிவிக்கப்பட உள்ள நிலையில், துணை மேயராகத் தென் சென்னை பகுதியைத் சேர்ந்த மகேஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.