மயிலாடுதுறையில் ஆளுநர் ஆர்.என். ரவி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து தமிழ்நாடு போலீசார் விளக்கம் அளித்துள்ளது.


மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று சாமி தரிசனம் மேற்கொள்ள சென்றார். தமிழக ஆளுனருக்கு பூர்ண கும்ப மரியாதை வரவேற்பு கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு மன்னம்பந்தல் வழியாக தருமை ஆதீனத்திற்கு ஆளுநர் சென்றார். தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ரதம் செல்ல இருந்தது. இதை இன்று ஆளுநர் ரவி ஆதீனத்தில் இருந்து துவங்கி வைத்தார். இந்த விழாவிற்கு ஆளுநர் ரவியை அழைக்கக் கூடாது என்று திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர்.



ஆளுநர் வரும் சாலைகளில் அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் செய்தன. அப்போது ஆளுநர் மன்னம்பந்தல் பகுதியைக் கடந்து செல்லும் போது போராட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கமிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இதற்கிடையே ஆளுநர் வாகனம் மீது கருப்பு கொடிகள், கற்கள் வீசப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்தத் தகவலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பஜகவினரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்தச் சூழலில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்குக் காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனம் மீது கற்கள், கொடிகளை வீசியதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ள காவல் துறை, ஆர்ப்பாட்டக்காரர்களை தடுப்புகள் அமைத்து கட்டுக்குள் வைத்து இருந்ததாகவும் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றியதாகவும் கூறியுள்ளது. மேலும், ஆளுநரின் வாகனம் மற்றும் உதர கான்வாய் வாகனங்கள் காலை 9.50 மணிக்கே ஏவிசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைக் கடந்துவிட்டது என்றும் ஆளுநர் ரவியின் கார்கள் அனைத்தும் முற்றிலும் சென்ற பிறகே ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்புக்கொடிகளை வீசி எறிந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.



ஆளுநரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அதிருப்தியில், ஒரு சிலர் கையில் ஏந்திய கொடிகளை சாலையை நோக்கி வீசினர். ஆளுநரின் வாகனங்கள் முழுவதும் சென்ற பின்பு காவல் அதிகாரிகள் சென்ற வாகனங்கள் மீது மட்டுமே ஒரு சில கொடிகள் விழுந்தன. உடனடியாகப் பாதுகாப்பிற்கு இருந்தக் காவலர்கள் கொடிகளைக் கைப்பற்றி ஆர்ப்பாட்டக்காரர்களைத் கைது செய்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். "கைது செய்தவர்கள் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டபூர்வ எடுக்கப்பட்டு வருகிறது." என்று போலீசார் கூறினர். ஆளுநர் வருகை பாதுகாப்பிற்காக மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவர் வே.பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் இரண்டு காவல்துறைத் துணை தலைவர்கள், 6 காவல்துறை கண்காணிப்பாளர்கள், 6 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 21 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 54 ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1120 காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என்று போலீசார் விளக்கம் தெரிவித்துள்ளனர்.