திருவாரூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கட்டையால் தாக்கி பாழடைந்த வீட்டில் வீசி சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  


திருவாரூர் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் கடந்த 6 மாதங்களில் அதிகரித்து வந்த வண்ணம் இருக்கிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருவாரூர் அருகே 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவை பிறப்பித்து குண்டர் சட்டம் போன்றவற்றில் கைது செய்து இதுபோன்ற வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனடிப்படையில் திருவாரூரில் மீண்டும் ஒரு 15 வயது சிறுமி கட்டையால் தாக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 


திருவாரூர் அருகே வசித்து வரும் தந்தையை இழந்த 15 வயது சிறுமி தனது அத்தை வீட்டில் தாயுடன் தங்கி வருகிறார். பத்தாம் வகுப்பில் பள்ளிக் கல்வி படிப்பை நிறுத்திய இவர் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சிறுமியை வீட்டில் உள்ளவர்கள் கடைக்கு பொருட்கள் வாங்க அனுப்பி வைத்துள்ளனர். அப்போது தனது தெருவிலுள்ள கடை பூட்டி இருந்ததால் பக்கத்து தெருவில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்கி சிறுமி சென்றுள்ளார். 




அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 பேர் உருட்டுக்கட்டையால் சிறுமியின் பின்தலையில் தாக்கியதாகவும், அரை மயக்கத்துடன் திரும்பிப் பார்த்தபோது அவரது நெற்றி பகுதியிலும் கட்டையால் தாக்கி மயக்கமடைந்த அவரை இரண்டு கைகளையும் பின்னால் வைத்து கட்டி வாயில் துணியை வைத்து தூக்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் கடைக்கு சென்ற சிறுமியை காணவில்லை என்று அவரது அத்தை தேடி உள்ளார். இதுகுறித்து குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். ஒரு மணி நேரம் கழித்து சிறுமி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில்  யாரும் குடி இல்லாத ஒரு வீட்டில் மயக்கத்தில் கிடந்ததாக அந்த வழியாக வந்தவர் பார்த்துவிட்டு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  இதுகுறித்து குடவாசல் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சிறுமியை இரவு நேரத்தில் கையை கட்டி வாயை பொத்தி தூக்கிச் சென்றுள்ளதாலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிறுமி கிடந்ததால் ஏதேனும் பாலியல் துன்புறுத்தலாக இருக்குமா என்கிற ரீதியிலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இரவு 10 மணிக்குள் இந்த சம்பவம் நடந்திருப்பது என்பது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் திடீரென்று இதனை செய்தார்களா அல்லது நீண்ட நாட்களாக இந்த சிறுமியை நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்து கட்டையால் தாக்கி தூக்கி சென்றார்களா என்கிற ரீதியிலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.




மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அந்தச் சிறுமி முதலில் பொருட்கள் வாங்க சென்ற கடை பூட்டி இருந்தது அதனால் பக்கத்து தெருவில் உள்ள கடைக்குச் சென்றார் என்று கூறப்படுகிறது. அந்த பூட்டி இருந்த கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அங்கிருந்து சிறுமியை யாரேனும் பின்  தொடர்ந்து வந்தார்களா என்பது குறித்து காவல்துறையினர் அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.