தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை தற்போது கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகபட்சமாக திருவள்ளூரின் புழல் ஏரியில் 8.2 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வெதர்மேன் ட்வீட் செய்துள்ளார்.
சென்னையில் ஆழ்வார்பேட்டை, கோடம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, தி.நகர், கிண்டி, ஆவடி, பெரம்பூர், அம்பத்தூர், கே.கே.நகர், அண்ணாநகர், கொளத்தூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும்,
திருவள்ளூரின் புழல், செங்குன்றம், அலமாதி உள்ளிட்ட பகுதிகளிலும், தருமபுரியின் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் விழுப்புரத்தின் மரக்காணம், விக்கிரவாண்டி, செஞ்சி ஆகிய பகுதிகளிலும் கள்ளக்குறிச்சி சின்னசேலம், தியாகதுருவம், கச்சராபாளையம் ஆகிய பகுதிகளிலும் விருதுநகரின் அருப்புக்கோட்டை, புளியம்பட்டி, பாளையம்பட்டி, ராமசாமிபுரம் ஆகிய ஊர்களிலும் கிருஷ்ணகிரியின் போச்சம்பள்ளி, மத்தூர், புலியூர், அரசம்பட்டி, அகரம், செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் திருச்சியின் முக்கியப் பகுதிகளான லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் ஆகிய இடங்களிலும் சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட ஆத்தூர், நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, ராசிபுரம், முள்ளுக்குறிச்சி, ஆயில்பட்டி, மங்களபுரம் ஆகிய ஊர்களிலும் மழை பெய்தது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்ததாவது.
“வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழையிலும், விடாமல் வொர்க் அவுட் செய்யும் முதல்வர் - வைரலாகும் புகைப்படங்கள்!
நாளை(21/08/2021) தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 22-ந் தேதி திருச்சி, மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வரும் 23-ந் தேதி உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசாகவும் ஒட்டியிருக்கும். அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியசாகவும் ஒட்டியிருக்கும்.”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.