பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகையான சித்ரா மாரடைப்பால் காலமானார். 56 வயதாகும் நடிகை சித்ரா சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தனது மகள் மற்றும் கணவருடன் வசித்து வந்தார். இதற்கிடையே திடீர் மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. மலையாளத்தில் மோகன்லால் மற்றும் ப்ரேம் நசீர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். தமிழில் கே.பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். நல்லெண்ணெய் விளம்பரம் மூலம் ‘நல்லெண்ணெய் சித்ரா’ எனப் பிரபலமடைந்தார். 


மலையாளத்தில் சுமார் 60 படங்களுக்கு மேல் நடித்த சித்ரா கொச்சியில் பிறந்தவர்.  தமிழ் மலையாளம் கன்னடம் எனத் தொடர்ச்சியாகப் படங்களில் நடிக்கத் தொடங்கியதால் பத்தாம் வகுப்போடு தனது படிப்பை நிறுத்திக் கொண்டார். தமிழில் ராஜ பார்வை, சின்னப்பூவே மெல்லப் பேசு, மனதில் உறுதி வேண்டும், ஊர்க்காவலன், என் தங்கச்சி படிச்சவ, சேரன் பாண்டியன்,அதிசய மனிதன் சின்னவர் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார்.  1990களில் திருமணத்துக்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு இடைவெளி எடுத்துக்கொண்டவர் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்தார். பிறகு தமிழ் சீரியல்களில் நடிக்கத் தொடங்கியவர் பாலச்சந்தரின் கையளவு மனசு, ஆசைகள், கணவருக்காக உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். சித்ராவின் மறைவுக்கு தமிழ் திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.