சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.


புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரியில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்ப உள்ளது. 28 மற்றும் 29-ந் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மிககனமழையும் பெய்யக்கூடும்.




வளிமண்டலத்தில் ஈரப்பதத்துடன் கூடிய மேற்கு திசை காற்று வலுவடைவதன் காரணமாக வரும் 30-ந் தேதியன்று நீலகிரி, கோவை, திருப்பூரில் இடி, மின்னலுடன் கூடிய அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், திருவண்ணாமலை, தேனி, சேலம் மற்றும் புதுச்சேரியிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.  


சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.




கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 10 செ.மீட்டரும், கள்ளக்குறிச்சியில் 8 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக விருதுநகர், தேவகோட்டை மற்றும் மேட்டூரில் தலா 1 செ.மீட்டர் மழை பதிவாகியது.


இன்று முதல் நாளை மறுநாள் வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வரும் 29-ந் தேதி மற்று்ம 30-ந் தேதி வரை கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.


இன்று முதல் வரும் 30-ந் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


மேலும் படிக்க : AIADMK Walkout: ஜெ., பல்கலை இணைப்பு: அதிமுக வெளிநடப்பு... காழ்ப்புணர்ச்சி இல்லை என முதல்வர் விளக்கம்!