சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய நாகை விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், ”பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமுக நீதி கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் புகுத்தப்பட்டுள்ளது என்றும், சமூகநீதி சிந்தனை உள்ளவர்களை நியமித்து, புதிய கல்விக்கொள்கையை நிராகரித்து நம்முடைய கல்விக்கொள்கையை நிறுவ வேண்டும், என்றார். தொடர்ந்து பேசிய ஷாநவாஸ், கடந்த ஆட்சிக்காலத்தில் சில கொண்டு வரப்பட்ட கலப்பு கற்றல் முறை தொடரும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.


சேலத்தில் உள்ள பெரியார் பெயரிலான பல்கலைக்கழகத்தில் அவரது கொள்கைக்கு எதிராக அனைத்தும் நடப்பதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாநில சுயாட்சிக்கு எதிரான அனைத்தும் நிகழ்ந்தது நாம் பார்த்தோம், என தெரிவித்தார். பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளதாகவும், துணைவேந்தர் நியமனங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு மாநில அரசின் ஆளுமை திறன் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்றார்.



அதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ”திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் திராவிடத்திற்கு எதிரான சில கருத்துக்கள் இடம் பெற்றிருந்ததாகவும், அந்தக் கருத்துக்கள் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.” என்று தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய விசிக உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், ”கடந்த ஆட்சிக்காலத்தில் அகஸ்தியா என்ற தொண்டு நிறுவனம் மூலம் கற்றல் கற்பித்தல் முறையை செயல்படுத்தப்பட்டது. புதிய கல்விக்கொள்கையில் உள்ள அந்த திட்டத்துக்கு அப்போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். இந்த ஆட்சியிலும் அதே செயல் தொடர்வதாக செய்தி வந்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் நமக்கு கல்வி சொல்லித் தரத் தேவையில்லை. நாம்தான் இந்தியாவிற்கே கல்வி சொல்லித் தரும் நிலையில் இருக்கிறோம்.” என்றார்.


அதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  ”இந்த தொண்டு நிறுவனங்கள் ஏற்கனவே 20 மாநிலங்களில் சமூகப் பங்களிப்பு நிதியுடன் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். கொள்கைப் பிடிப்பில் உறுதியாக உள்ள இந்த அரசின் கீழ், கருத்தியல் ரீதியாக யாரும் யதலையிட நினைத்தால் முதலமைச்சர் இரும்புக்கரம் கொண்டு அடக்குவார். ஆய்வகங்களை நவீன படுத்துவதில் தொண்டு நிறுவனங்கள் பங்களிப்பு இருக்கிறது. எந்த விதத்திலும் கருத்தியல் ரீதியாக அவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டார்கள்” எனவும் தெரிவித்தார்.



தொடர்ந்து பேசிய ஆளூர் ஷாநவாஸ், ”தாய்த் தமிழை பாதுகாக்கவும், அதனை மேம்படுத்தவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் பணியாற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும். கலைஞரால் பாராட்டு பெற்ற கவிக்கோ அப்துர் ரகுமான் பெயரால் பல்கலைக்கழகத்தில் ஆய்வு இருக்கை அமைக்கப்பட வேண்டும். பெரியாரிய சிந்தனையாளர் ஐயா வே.ஆனைமுத்து அவர்களின் பெயரை தமிழ்நாடு ஆவணக் காப்பக நூலகத்திற்கு சூட்ட வேண்டும். தமிழ்நாட்டில் உருவாக உள்ள ஏதேனும் கல்வி வளாகத்திற்கு வி.பி.சிங் பெயரை வைக்க வேண்டும்.” என கோரிக்கை விடுத்தார்.