விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு பேரவையில் எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.


விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்பான விவாதத்தின்போது, ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் அன்பழகன் புகார் கூறியிருந்தார்.


இந்த புகாருக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழ்நாடு அரசு காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளவில்லை. காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட நினைத்திருந்தால் ‘ அம்மா உணவகம்’ அதே பெயரில் தொடர்ந்திருக்காது. காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும் எந்த எண்ணமும் திமுக அரசுக்கு கிடையாது” என்று கூறினார்.


 






இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதா பல்கலைக்கழகம் செயல்படாது என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் கூறியதால், பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம் எல் ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.


இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இபிஎஸ், “ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து செயல்பட வலியுறுத்தியும் தொடராது என அறிவித்ததால் வெளிநடப்பு செய்தோம். ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் இருக்கக் கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியுடன் அரசு செயல்படுகிறது” என்று கூறினார்.


 






இதனிடையே, ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாட்டையே காணவில்லை என்றும், அதை மீட்டெடுக்கும் பணியில் புதிய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.


முன்னதாக, திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெயர் ‘கலைஞர் கருணாநிதி கலை, அறிவியல்’ என மாற்றப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார். சட்டப்பேரவையில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன் கோரிக்கையை ஏற்று அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.