கடந்த வாரம் முழுக்க சென்னையில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காரைக்கால் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடந்தது. இதனால் சென்னையில் மிக கனமழை பெய்தததோடு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இப்போது அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ள நிலையில் சென்னைக்கு மழை வராது என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென மாறிய வானிலை காரணமாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மையின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது.
சரியாக இன்று காலை 7 மணிக்கு வெளியாகி இருக்கும் இந்த அறிக்கையில் "தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்." என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது இன்று காலை 10 மணி முதல் கனமழை தொடங்கலாம் என்று அந்த அறிக்கை விவரிக்கிறது.
ஏற்கனவே கூறியிருந்தது போல நாளை திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் என்றும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் என்றும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.