கிராமங்களை விட்டுப் பெருநகரங்களுக்கு வேலைக்குச் சென்ற இளைஞர்களில் சிலர் தற்போது தங்களது கிராமங்களை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக இருக்கிறார் விஷ்ணு மனோகரன் எம்.எஸ்ஸி , பயோடெக்னாலஜி முடித்துவிட்டு , சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தார். ஒரு கட்டத்தில் அதைத் துறந்துவிட்டு கடந்த 10 வருடங்களாகச் சொந்த ஊரில் இயற்கை விவசாயம் தேனீ வளர்ப்பு , மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
கரூர் நகரத்தையொட்டி இருக்கும் செட்டிப்பாளையத்தில் இருக்கிறது அவரது பண்ணை அங்கே மீன்களுக்கு உணவிட்டுக்கொண்டிருந்த விஷ்ணு மனோகர் கூறியதாவது - ”எங்களுக்கு பூர்வீகத் தொழில் விவசாயம்தான். இருந்தாலும் எங்கப்பா என்னைப் படிக்க வெச்சு வேலைக்கு அனுப்ப நினைச்சார். அமராவதி ஆற்றங்கரையில் எங்க வீடு இருந்ததுனால சின்ன வயசுல இருந்தே மீன் பிடிக்கும் பழக்கத்தில் ஆர்வமாக இருந்தேன்.
இந்த நிலையில் 2007 ம் வருஷம் எம்.எஸ்ஸி பயோடெக்னாலஜி முடிச்சுட்டு சென்னையில் ஒரு கம்பெனியில ரெண்டு வருஷம் வேலைபார்த்தேன். பிறகு 2009-ஆம் வருஷம் தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தேன். இருந்தாலும் என்னோட மனசு முழுக்க ஊரையே சுத்தி வந்துச்சு. 2011-ஆம் வருஷத்துல இருந்து நானே கரூர்ல அலங்கார மீன்கள் விற்பனைக் கடையை ஆரம்பிச்சு, மீன் குஞ்சுகளை விற்பனை பண்ண ஆரம்பிச்சேன். அதன்பிறகு 2012-ஆம் வருஷம் இந்த இடத்தில 3 லட்சம் ரூபாய் முதலீடு போட்டு 25 சிமென்ட் தொட்டிகளை அமைச்சேன். அதுல 3 அடி ஆழம், 5 அடி நீளம், 5 அடி அகலம் உள்ள தொட்டிகள் 20 எண்ணிக்கையிலும் , 10 அடி நீளம் , 5 அடி அகலம் , 3 அடி தொட்டியை கட்டினேன். கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுச்சு. மீன் விற்பனை சுணங்க ஆரம்பிச்சது.
உடனே தேனீக்கள் வளர்க்கணும் ஆர்வம் வந்துச்சு. 25,000 ரூபாய் முதலீட்டுல 10 தேனீப் பெட்டிகளை வாங்கிட்டு வந்து, தோட்டத்தில் அங்கங்கே வெச்சேன். ஆனா பெட்டிகள்ல இருந்த தேனீக்கள்ல பாதிக்கு மேல பறந்து போயிடுச்சு. பிறகு கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்துல நடத்துற தேனீ வளர்ப்பு பயிற்சிகள்ல கலந்துக்கிட்டேன். அதோடு தேனீக்கள் சம்பந்தமான தகவல்களைத் தேடித்தேடி படிக்க ஆரம்பிச்சேன்.
அதன்மூலமாக தேனீ வளர்ப்பின் நுணுக்கங்களை கத்துக்க முடிஞ்சது. பிறகு எல்லாப் பெட்டிகளிலும் தேனீக்கள் தங்க ஆரம்பிச்சுச்சு. நான் தேன் உற்பத்தியைவிட தேனீக்களை உற்பத்தி பண்ணி தேனீப் பெட்டிகளாக விவசாயிகளுக்குக் கொடுக்க ஆரம்பிச்சேன். அடுத்து கொசுத்தேனீக்களை வளர்க்க ஆரம்பிச்சேன். அதுவும் பலன் தர ஆரம்பிச்சது. தொடர்ந்து கொம்புத்தேன், இத்தாலி தேனீக்களையும் வளர்த்து உற்பத்தியைப் பெருக்கி, தேன் பெட்டிகளோடு சேர்த்து விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். இதுல இத்தாலி தேனீக்கள் வளர்ப்பு மட்டும் கொஞ்சம் பிரச்னை கொடுத்துச்சு. அதனால் அதை மட்டும் இப்ப நிறுத்தி வெச்சிருக்கேன். தேனீக்களை உற்பத்தி பண்ணி ராணித்தேனீயோட சேர்த்து கொடுக்க 3 மாசமாகிடும். இப்ப 250 தேன் பெட்டிகள் என்னோட தோட்டத்துல இருக்கு தேன் விற்பனையும் செய்றேன். அடுத்து மலைத்தேனீ வளர்க்கிறதுக்கான வேலைகள் பண்ணிக்கிட்டு இருக்கிறேன்” என்கிறார்
தேனீக்களிடம் சகஜமாக பாதுகாப்பு உடை எதுவும் அணியாமல் தேனீக்களை கையால் எடுத்து பின்னர் தேன் கூட்டிலிருந்து தேனை எடுத்து வருகிறார். தேனீக்கள் மற்றும் மீன்களை உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர்களுக்கும் விற்பனை செய்து வருகிறார். இந்த மீன் மற்றும் தேன் விற்பனை உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வந்த இளைஞர் மாதம் செலவு போக 60 ஆயிரம் ரூபாய் ஈட்டி வருவதாகச் சொல்கிறார்