விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வருகின்ற 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளட்சித் தேர்தல் வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி  தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் அருகிலுள்ள அன்னியூர் பகுதியில் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடைபெற்றது.




இந்த கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். அண்ணாமலை உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் இருந்த பொது மக்களில் ஒருவர் பெட்ரோல் விலையை எப்போது குறைப்பீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து  பேசிய அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சி  பெட்ரோல் விலையை 35 ரூபாய் குறைக்கும். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து விலையை குறைப்போம் என பதிலளித்தார்.


தமிழ்நாடு  நிதி அமைச்சர் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வளைகாப்புக்கு சென்று விட்டார். இது தான் திமுகவின் அவலமான நிலை, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க , பாரதிய ஜனதா அரசு தயாராக உள்ளது. பெட்ரோல், டீசலை ஏன் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரக்கூடாது என நிதியமைச்சர் சொல்கிறார் என புரியவில்லை. இதனை தமிழ்நாடு  அரசு விளக்க வேண்டும். சத்தியம் செய்கிறேன் பாரதிய ஜனதா கட்சி  பெட்ரோல் விலையை குறைப்பதற்காக தொடர்ந்து போராடுவோம். மாநில அரசு வரியை குறைக்க வேண்டும். திமுகவுக்கு ஆண்டவன் நல்ல புத்தியை கொடுத்து பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முன்வர வேண்டும். என பேசினார்.


தொடர்ந்து பொது மக்கள் கேள்விகளை எழுப்பியவாரு இருந்ததால் கூட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு மாநில தலைவர் அண்ணாமலை கிளம்பினார். கேள்வி கேட்ட நபரை பாஜகவினர் அமைதிப்படுத்த முயற்சித்தனர் இருப்பினும் அவர் கேள்வி கேட்டவாறே இருந்ததால் காவல் துறையினர் அவரை அப்புறப்படுத்தினர், இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.



முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே முறுக்கேரி - சிறுவாடி பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு பிரச்சாரம் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டால் திமுகவைப் பொறுத்தவரை மத்திய அரசு கொடுக்கின்ற குடிநீர் திட்டத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கினால் மட்டுமே குடிநீர் பைப் வரும். நான்கு மாத காலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை பார்த்துக் கொண்டிருப்பீர்கள் அவர்கள் செய்திருக்கக் கூடிய சாதனை என்னவென்றால் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இரண்டரை லட்சம் ரூபாய் சைக்கிளில் செல்வது தான். நீங்களும் நானும் செல்லக்கூடிய சாதாரண சைக்கிள் அல்ல அந்த சைக்கிளின் விலை இரண்டரை லட்சம், அந்த சைக்கிளில் அவர் ஒரு கிலோ மீட்டர் செல்வதற்கு 2000 போலீஸ் பாதுகாப்பு, சைக்கிளுக்கு முன்பாக 20 காரும் சைக்கிளுக்கு பின்பாக இருபது காரும் செல்கின்றன.



இதுபோன்ற சைக்கிள் செல்வதினால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். சைக்கிளில் செல்லும் அக்கறையை அவரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார் என்றால் மக்கள் அவரை விரும்புவார்கள். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாத மாதம் கொடுக்கப்படும் என்று கூறியது யாருக்கும் வரவில்லை, இலவசமாக சிலிண்டர் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார் எதையும் வழங்கவில்லை. திராவிட கழகத்தின் அரசு பொருத்தவரை இது ஒரு புளுகு மூட்டை யாகவும் பொய்கள் அதிகமாக பேசும் அரசாக இருக்கிறது என பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.