இறந்துபோன தந்தை காகம் வடிவில் தங்களின் வீட்டுக்கு வந்திருப்பதாக நினைத்து ஒரு குடும்பத்தார் காகத்திற்கு விதவிதமான உணவை வைத்து பார்த்துக்கொள்ளும் சம்பவம்  சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டம் சோமரம்பேட்டை அருகே உள்ள அல்லித்துறையைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு வயது 60. விவசாயியான இவர், ஜோசியமும் ஜாதகமும் பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இந்த நிலையில், பாண்டியன் கடந்த மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் உடலை  அடக்கம் செய்து விட்டு, வீட்டில் அவரின் புகைப்படத்தை வைத்து குடும்பத்தினர் வழிபட்டு வந்தனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, காகம் ஒன்று பாண்டியன் வீட்டையே சுற்றி சுற்றி வந்துள்ளது. இதனைக்கண்ட அவரது குடும்பத்தார் காகத்தை விரட்டியடித்துள்ளனர். ஆனால், காகம் எந்தவித அச்சமும் இல்லாமல் வீட்டின் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த பாண்டியனின் புகைப்படம் முன்பாக வந்து அமர்ந்து கொண்டது. இதைக்கண்ட குடும்பத்தினர் இறந்துபோன தங்கள் தந்தையே காகம் வடிவில் வீட்டுக்கு வந்ததாக நம்ப தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து, காகத்துக்கு தேவையான உணவு, நீரை வழங்கி வணங்கி வருகின்றனர்.




இறந்துபோன தனது தந்தை காகம் வடிவில் வந்துள்ளார் என்றும், தந்தை அமரும் இடம் மற்றும் படுக்கை அறைக்கு அந்த காகம் செல்கிறது என்றும், தங்களுக்கு சொந்தமான வயலில் தந்தை வடிவில் உள்ள காகம் வந்து அமர்ந்து கொள்கிறது. இதுவெல்லாம் எப்படி ஒரு காகத்திற்கு தெரியும். எனவேதான், தங்களின் தந்தை காகம் வடிவில் வந்துள்ளதாக பாண்டியனின் மகன் வினோத் உருக்கமாக கூறினார்.


வினோத் மேலும் கூறுகையில், “எங்கள் தந்தை வீட்டில் எங்கெல்லாம் செல்கிறாரோ. அங்கு எல்லாம் காகம் செல்லும். அப்போதுதான் நினைத்தோம் காகம் ரூபத்தில் தந்தை வந்துள்ளார் என்று. இப்பவும் அவர் எங்களை விட்டு போகவில்லை நின்று கொண்டுதான் இருக்கிறார்" என்று கூறினார். இந்த நிகழ்வை அந்தப்பகுதி மக்கள் ஆச்சயர்த்துடன் பார்க்கின்றனர்.


மேலும் செய்திகள் படிக்க: