மிகக்குறைவாக மழை பெய்துள்ளதால் எங்களிடம் போதிய அளவில் தண்ணீர் இல்லை என, காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.


சித்தராமையா விளக்கம்:


இதுதொடர்பாக பேசியுள்ள சித்தராமையா, ”கேரளா, குடகு மாவட்டங்களில் மிகக்குறைந்த அளவே மழை பெய்துள்ளது. மிகக் குறைவாகவே மழை பெய்துள்ளதால்  எங்களிடம் போதிய தண்ணீர் இல்லை. இதன் காரணமாகவே தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தண்ணீரை திறக்க முடியவில்லை” என பேசியுள்ளார். தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் சித்தராமையா தங்களுக்கே போதிய தண்ணீர் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். 


தமிழ்நாட்டிற்கான நீர் பங்கீடு:


தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 9ஆம் தேதி வரை 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தர வேண்டும். ஆனால், 3 டி.எம்.சி. தண்ணீர்தான் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


காவிரி மேலாண்மை ஆணையம்:


இந்த சூழலில், தேசிய தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது கூட்டம் நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை வகித்தார்.


தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழ்நாடுக்கு 38 டி.எம்.சி தண்ணீரை உடனே திறக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. ஆனால், கர்நாடகம் தண்ணீர் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. எனவே, கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தமிழ்நாடு அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். இதுதொடர்பாக பேசிய தமிழ்நாடு நீர்வள அமைச்சர் துரைமுருகன், ”காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை.  தமிழ்நாட்டிற்கான நீரை நீதிமன்றம் மூலம் பெற்றுத் தருவோம்”  என உறுதியளித்தார். இந்நிலையில் தான், கர்நாடக அரசு தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


தண்ணீர் தர மறுத்த கர்நாடகம்:


இந்த நிலையில், கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.


முன்னதாக, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பின்பு, செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா கூறுகையில், "தமிழ்நாட்டில் கடந்த 9ஆம் தேதி நிலவரப்படி 37.9 டி.எம்.சி. தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் நாள்தோறும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றது.


இந்த விஷயத்தை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.  இந்த கூட்டத்திலும், தமிழ்நாட்டுக்குரிய நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்க மறுத்ததால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து வெளியேறினோம். கடந்த 9ஆம் தேதி வரை 37.9 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை" என்றார்.