Omni bus Fares: தொடர் விடுமுறை எதிரொலி.. ஆம்னி பேருந்தின் ஆதிக்கம்.. ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த டிக்கெட் விலை!

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு ரூ. 4000 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக படையெடுத்து வருகின்றன. நேற்று மாலை முதல் தாம்பரம், கோயம்பேடு உள்ளிட்ட வெளியூர் பேருந்துகள் புறப்படும் இடங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. 

Continues below advertisement

இந்தநிலையில், சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு ரூ. 4000 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதைகேட்டு, அதிர்ச்சியடைந்த பயணிகள் வேறுவழியின்றி கொடுத்து பயணம் செய்துள்ளனர். 

தொடர் விடுமுறை: 

இந்த வார இறுதி நாளான இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 12 ஆம் தேதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமையை (ஆகஸ்ட் 13) தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஆகஸ்ட் 15) செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை வருகிறது. இதனால் வேலைக்கு செல்லும் மக்கள் வருகின்ற திங்கள் கிழமை மற்றும் ஒரு நாள் விடுப்பு எடுத்துகொண்டாலோ, வீட்டில் இருந்து வேலை பார்த்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் சூழல் உள்ளது. எனவே, பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கும், சுற்றுலா செல்வதற்கும் மற்றும் ஆடி மாதம் கோயில் திருவிழாக்களுக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. 

இந்த தொடர் விடுமுறை எதிரொலியாக ஏற்கனவே சிறப்பு ரயில்களின் முன்பதிவுகள் முடிந்துவிட்டன. தொடர்ந்து, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு நேற்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்பட்டது. ஆகஸ்ட் 12 ஆம் தேதியான இன்று கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து 200 பேருந்துகளும், பெங்களூருவில் இருந்து முக்கிய இடங்களுக்கு 400 பேருந்துகளும் என மொத்தம் 1,100 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்துநிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி பயணம் மேற்கொள்ள 18,199 பயணிகளும், ஆகஸ்ட் 12 ஆம் தேதி  பயணம் செய்ய 6,949 பயணிகளும் மற்றும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி  பயணிக்க 4,514 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். 

முன்பதிவு செய்யபடாத ரயில்களிலும் பயணம் செய்ய பொதுமக்கள் அதிகளவில் முயற்சித்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால், தாம்பரம், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. 

நேற்று இதை பயன்படுத்திக்கொண்ட ஆம்னி பேருந்துகள் தங்கள் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. அதன்படி, குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் பயணம் செய்ய ரூ. 2000 எனவும், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்ய தலைக்கு ரூ. 3000 முதல் ரூ. 4000 வரை வசூலிக்கப்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.  

Continues below advertisement