எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவோம் என அறிவிக்க கோரிய, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கோரிக்கையை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நிராகரித்துள்ளார்.
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு:
கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்தியில் பிரதமராக மோடியையும், மாநிலத்தில் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியையும் அண்ணாமலை அறிவிக்க வேண்டும் என, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தியது தொடர்பாக விளக்கமளித்தார். அதன்படி, “அதை எப்படி நான் அறிவிக்க முடியும் . எனக்கு தெரியவில்லை. தேசிய தலைவர்கள் தான் அதை சொல்ல வேண்டும். என்னை பொறுத்த வரையில் சில விஷயங்களில் நான் தெளிவாக உள்ளேன். அரசியல் இப்படி தான் செய்ய வேண்டும். அந்த மாதிரியான அரசியலை தான் செய்ய வேண்டும் என்ற முடிவிலும் இருக்கிறேன்.
அதிமுக கோரிக்கை நிராகரிப்பு:
அதிமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் கூறிய கருத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. தேசிய தலைவர்கள் உரிய பதில் அளிப்பார்கள். கூட்டணியின் கூட்டத்தின் போது இதுதொடர்பாக பேசி முடிவெடுக்கப்படும். செல்லூர் ராஜுவின் கோரிக்கையை எல்லாம் என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. என்னை பொருத்தவரை, பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் நான் இங்கு தலைவராக இருக்கிறேன்” என அண்ணாமலை பேசினார்.
அதிமுக-பாஜக கூட்டணி:
அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பேசிய அண்ணாமலை, “அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் பிரச்சனை இல்லை. பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் பிரச்சனை இல்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்கள் உடன் அண்ணாமலைக்கு பிரச்சனை இருக்கலாம். மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்று கொள்பவர்கள் கூட்டணியில் உள்ளனர். செல்லூர் ராஜூ சொல்வது போல் மத்தியில் மோடி, மாநிலத்தில் எடப்பாடி என நான் எப்படி அறிவிக்க முடியும்? தன்மானத்தை கேள்விக் குறியாக்கினால் பேசுவேன். தன்மானத்தை விட்டு தந்து அரசியல் செய்ய மாட்டேன். எனக்கு யாரிடமும் பிரச்சனை இல்லை அதிமுக தலைவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியாது. பாஜக- அதிமுக இடையே பிரச்சனை இல்லை, வெவ்வேறு சித்தாந்தங்கள் இருக்கும்போது முட்டல்-மோதல் வரத்தான் செய்யும்” என்றார்.
மகளிரி இடஒதுக்கீடு:
தொடர்ந்து மகளிர் இடஒதுக்கீடு பற்றி பேசிய அண்ணாமலை, “33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கடந்த காலங்களில் இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட காலத்திற்கு பிறகு இச்சட்டம் நிறைவேறியுள்ளது. சென்செக்ஸ் முடிந்ததும் அடுத்து வரும் தேர்தலில் இந்த இட ஒதுக்கீடு அமலில் வரும். பாஜக கட்சிக்குள் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கி வருகிறது. இதை பெண்கள் உரிமையாக பாஜக பார்க்கிறது, இதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். வெகு விரைவில் 33 சதவீதத்திற்கு மேல் பெண்கள் சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள். ஏக மனதாக அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளனர். இரண்டு முறை இதற்கு முன்பு நாடாளுமன்ற எம்.பி.க்கள் சீட் உயர்த்தியுள்ளோம். ஸ்டாலின் சொல்வது போல எந்த சதியும் இல்லை. சதி என்ற வார்த்தையை முதல்வர் எப்படி பயன்படுத்தலாம்? இது மகளிருக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய வாய்ப்பு” என அண்ணாமலை தெரிவித்தார்.