அஇஅதிமுக கட்சியின் பெயர், அண்ணாவின் படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க கோரி, அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையில் ஓபிஎஸ் தரப்பு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் இந்த பொதுக்குழு செல்லும் என வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டது. 


அப்போது வாதிட்ட இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், ” தற்போது ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை. பொது செயலாளர் பதவி மட்டுமே உள்ளது. கட்சியில் 95% ஈ.பி.எஸ் தலைமை ஏற்றுள்ளனர். கட்சி விதிகளின் படி தேர்தல் நடத்தபட்டு பொதுச் செயலாளராக தேர்வாகி உள்ளார்” என குறிப்பிட்டு வாதிட்டார். இறுதியாக ஜூலை 11 ஆம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழு செல்லும் எனவும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளர் என்றும் தீர்ப்பளித்தது.


அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என செயல்பட்டு வருகிறார்.


சென்னை உயர்  நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள உரிமையியல்  வழக்கில் பொது செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஒபிஎஸ் கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


எனவே அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.


இந்த உரிமையியல் வழக்கு முடியும் வரை இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக-வால் நியக்கப்பட்டவர்களை நீக்குவது, வேட்பாளர்களை அறிவிப்பது என தங்களுக்கு இணையாக ஒபிஎஸ் செயல்பட்டு வருகிறார் என்றும் பொது செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஒபிஎஸ் கூறிவது தவறு என்றும் ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதற்கு இந்த வழக்கில் பதிலளிக்க குறுகிய காலம் வேண்டும் என ஓபிஎஸ் தரப்பி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று ஓபிஎஸ் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.