செம்பரப்பாக்கம் ஏரிக்கு கனமழையால் நீர்வரத்து அதிகரித்த நிலையில், ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அளவானது 6 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்ட நிலையில் அது குறைக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (நவம்பர் 29) முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று மாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் மக்கள் அவதியடைந்தனர். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழையின் அளவை கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 


இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சென்னையின் புறநகரில் உள்ள பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் இந்த ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்தது.


தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மொத்தம் 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 20.31 அடியும் நீர் இருப்பு உள்ளது. 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 22.53 அடி நீர்மட்டம் உள்ளது. 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 17.64 அடி நீர் உள்ளது. 35 அடி கொண்ட பூண்டி ஏரியில் 31. 40 அடி நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1100 கன அடியாக இருந்த நீர்வரத்து 3098 கன அடியாக அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அளவு வினாடிக்கு 1500 கன அடியில் இருந்து 2500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கிடையில் நீர் திறப்பு காலை  8 மணி அளவில் 6000 கன அடி நீராக அதிகரிக்கப்பட்ட நிலையில் அது தற்போது 4 ஆயிரம் கன அடியாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


அடையாற்றில் தண்ணீர் வரத்த அதிகரித்துள்ள நிலையிலும், ஏரியின் நீர் வரத்து குறைந்துள்ளதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை, மற்றும் அடையாறு ஆற்றின் கரையில் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதி வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை செம்பரம்பாக்கம் மற்றும் குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் கிட்டதட்ட 6.2 செ.மீ மழை அதிகப்பட்சமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.