வங்கக்கடலில் வட மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெற உள்ள நிலையில், கடந்த சில தினங்களாகவே சென்னையில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் மழை பெய்து வந்த நிலையில், மாலை முதல் மழை தீவிரமாக பெய்து வருகிறது.
சென்னையில் வடபழனி, தி.நகர், பாரிமுனை, கோயம்பேடு, அண்ணாநகர், அம்பத்தூர், கொளத்தூர், அம்பத்தூர், ஆவடி, ஆலந்தூர், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, ராயப்பேட்டை என கடுமையாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான், சென்னையில் இன்று இரவு முதல் காலை வரை விடிய, விடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை விடாமல் பெய்து வரும் மழை நள்ளிரவு வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநகராட்சி பணியாளர்கள், களப்பணியாளர்கள் அனைவரும் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களுக்கு சென்று உடனடியாக தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை முழுவதும் தொடர்ந்து மழை கொட்டி வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டுவதற்கு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னை நகரின் முக்கிய சுரங்கப்பாதைகளான நுங்கம்பாக்கம், அரங்கநாதர் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை என பல முக்கிய சுரங்கப்பாதைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகள் வேறு பாதையில் செல்ல போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெரம்பூர் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் சாலைகளில் போக்குவரத்தை சீர்செய்து வருகின்றனர்.
சென்னையில் அதிகபட்சமாக கொளத்தூர் 14 செ.மீ. மழை பெய்துள்ளது. திரு.வி.க, நகரில் 12 செ.மீ. மழையும், அம்பத்தூரில் 12.7 செ.மீ. மழையும், புழலில் 10 செ.மீ. மழையும், கோடம்பாக்கத்தில் 10 செ.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 11 செ.மீ. மழையும் பெய்துள்ளது. சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மழை தொடர்ந்து கொட்டி வருவதால் மக்கள் அத்தியாவசிய பணிக்காகவும், பணிமுடிந்து வீட்டிற்கு திரும்புபவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை காலை 8.30 மணி வரை ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 25 மாவட்டங்களுக்கு அடுத்த 1 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.