கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகள் தொடர்ந்து நிரப்பி வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருவதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணையில் இருந்து நடப்பாண்டு முன்கூட்டியே மே மாதம் 24 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து நீர் மட்டம் குறையத் தொடங்கியது இந்நிலையில், தற்போது காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், அங்கிருந்து அதிக அளவிலான உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை முதல் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்த்து.


 


இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சத்து 153 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்மட்டம் 106.70 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியில் இருந்த நீர் திறப்பு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று மேட்டூர் அணை 68 வது முறையாக 100 அடியை எட்டிய நிலையில், ஒரே நாளில் 7 அடி அதிகரித்து இருப்பது டெல்டா பாசன விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது நீர்வரத்து ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக தொடர்ந்து நீடித்தால் அடுத்த ஒரு சில தினங்களில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் வாய்ப்பு உள்ளது. இதனால் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நீர் வரத்து அதிகம் உள்ளதால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.