தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்துவந்த உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக கிராம ஊராட்சிகளுக்கு நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என பலரும் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்த சூழலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேலும் தேர்தலுக்கான தேதிகளும் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் வெற்றிக்கான வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளன.




மேலும், கொரோனா பாதிப்பும் பிப்ரவரி மாதம் குறையலாம் என  சென்னை ஐஐடி ஆய்வுக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். இதனால் பிப்ரவரி பிற்பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் தேர்தல் தொடர்பான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.





நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மிக விரைவில் நடைபெறும் என்பதால் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே பல அரசியல் கட்சிகளும் விருப்ப மனுக்களை வாங்கும் பணிகளை முடித்துவிட்டன. அதன் அடிப்படையில் வேட்பாளர் தேர்வும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியான உடன் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தொடங்கும்.




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சீர்காழி நகர பூத்கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் சீர்காழி நகர செயலாளர் ம.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய தலைமை செயற்குழு உறுப்பினரும், சீர்காழி சட்டமன்ற உறுப்பினருமான பன்னீர்செல்வம், சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் கட்சி தலைமை முடிவு எடுத்து அறிவிக்கும் வேட்பாளருக்கு போட்டியாக திமுகவை சேர்ந்தவர்கள் சுயேட்சையாகவோ வேறு எந்தவகையிலும் கட்சி வேட்பாளர் வெற்றிக்கு எதிராக செயல்படக்கூடாது என்றும், போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அடுத்து வரவுள்ள கூட்டுறவு சங்க பொறுப்புகள் வழங்கிட பரிசீலிக்கப்படும் என்றார்.


தொடர்ந்து பேசியவர் தற்போது மக்கள் அனைவரும் எதிர்பார்த்து போல பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் நிதியும் வழங்கி இருந்தால் நமக்கு 100 சதவீதம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்திருக்கலாம், இருந்தும் அனைவரும் பாராட்டக் கூடிய வகையில் செயல்படக் கூடிய தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டால் நாம் 100 சதவீத வெற்றியை கண்டிப்பாக அடையலாம் என்றார்.




மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.முருகன் பங்கேற்று பேசுகையில், சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு பாகுபாடின்றி கட்சியினர் ஒன்றிணைந்து களபணியாற்றி வெற்றிபெற செய்யவேண்டும். எதிர்கட்சியாக திமுக இருந்தபோதே சீர்காழி நகராட்சி தலைவர் பதவிகளை தொடர்ந்து வெற்றி பெற்று தக்கவைத்துவந்துள்ளது. தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால் சீர்காழி நகர்மன்றத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் எளிதாக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மூலம் வெற்றிபெறமுடியும் என்றார்.