குடிமைப் பணி அதிகாரிகளின் பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இந்தத் திருத்தம் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதோடு கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது என மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாநிலங்களில் பணிபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை தேவைப்படும்போது, மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் பணிகளுக்கு அழைத்துக் கொள்ளும் அதிகாரத்தை 1954-ன் இந்திய ஆட்சிப் பணி விதி 6-ன் புதிய திருத்தம் வழங்குகிறது. இது குறித்து கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளிடமும் கருத்துக் கேட்டிருந்தது. மத்திய அரசு நடைமுறைப்படுத்த நினைக்கும் இந்தப் புதிய திருத்தம் மாநில அரசின் உரிமைக்கு முற்றிலும் எதிரானது.
தற்போதைய சட்ட நடைமுறைப்படி, மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை மத்திய அரசின் பணிகளுக்கு அழைக்க விரும்பும் பட்சத்தில், அதற்கு மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெறுவது அவசியமானதாகிறது. ஆனால், மத்திய அரசு கொண்டுவரும் திருத்தத்தின் மூலம் மாநில அரசின் அனுமதியோ அல்லது ஒப்புதலோ இன்றி மத்திய அரசுப் பணிகளுக்கு மாநில அரசு அதிகாரிகளை உடனடியாக மாற்றிவிட முடியும். இது நிர்வாக ரீதியாக மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும், குடிமைப்பணி அதிகாரிகளுக்கும் ஊறு விளைவிக்கக் கூடிய ஒன்று. அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவும் இது அமையக்கூடும் என்பதற்கு மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளருக்கு ஓய்வு பெறும் நாளன்று நடந்த சம்பவமே சான்று.
மத்திய அரசின் இந்த முடிவு மாநிலங்களின் நிர்வாகத்தைக் கடுமையாகப் பாதிக்கும். கூட்டாட்சித் தத்துவத்தைப் பின்பற்றும் நாட்டில், மாநில அரசின் உரிமைகளை அர்த்தமற்றதாக்கும். இதுபோன்ற திருத்தங்களை அமல்படுத்துவது கூட்டாட்சிக்கு எதிரானது. இந்தக் கேடர் விதி திருத்த நடவடிக்கையின் மூலம் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு தனதாக்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அரசு அதிகாரிகளின் பணி ஆரோக்கியத்திற்கும் இது உகந்தது அல்ல.
இந்திய ஆட்சிப் பணி விதி 6-ல் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசுகளுடனான உறவில் விரிசல் நிகழ வழிவகுக்கும் இதுபோன்ற முயற்சிகளை ஆளும் பாஜக அரசு விட்டொழிக்க வேண்டும். மேற்குவங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள சூழலில், தமிழக அரசும் இத்திருத்தத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டையும் எதிர்ப்பையும் வலுவாகப் பதிவு செய்யவேண்டும்.
இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
குடிமைப்பணித் தேர்வு:
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வை நடத்துகிறது. இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி என்ற அனைத்திந்திய பணிகளும், இந்திய வெளியுறப் பணி (Foreign Service), வருவாய்ப் பணி (Revenue Service), அஞ்சல் பணி (Postal Service) போன்ற மத்தியப் பணிகளையும் நிரப்புகிறது. இதில், மத்தியப் பணிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எந்த மாநில அரசுகளையும் சார்ந்திராமல், மத்திய அரசின் கீழ் உள்ள பல்வேறு பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
ஆனால், அனைந்திந்திய பணிகளான ஐஏஎஸ்,ஐபிஎஸ்,வனப்பணி அதிகாரிகள் மாநில அரசின் கீழ் பணியாற்றுவார்கள். இருந்தாலும், 1954 வருட பணி விதிகளின் படி, மாநில அரசின் சம்மதத்தோடு இந்த அதிகாரிகளை மாற்றுப் பணிகளுக்கு (Deputation) மத்திய அரசு அழைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.அமுதா பிரதமர் அலுவலகத்தில் (பிஎம்ஓ) இணை செயலாளராக நியமிக்கப்பட்டார் (Deputation).
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்