விமானநிலையங்களில் கடத்தலைத் தடுக்க பெட்டிகள் சோதனை, பாடி ஸ்கேனிங் எனப் பலவகை சோதனைகள் இருந்தாலும் கூட எல்லாவற்றையும் தாண்டி தங்கம் கடத்துவதும், தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் கடத்துவது நடைபெறுகிறது. கடத்தலில் இவை இரண்டுமே பிரதான இடம் பெற்றிருந்தாலும் கூட அவ்வப்போது கடல் அட்டைகள், நட்சத்திர ஆமைகள், பறவைகள், அரியவகை விலங்குகள் கடத்தலும் நடைபெறுகிறது. இவற்றில் பல அவற்றின் மருத்துவத் தன்மையின் காரணமாகவே கடத்தப்படுகின்றன. அப்படித்தான் தாய்லாந்தில் இருந்து அரிய வகை விலங்குகள் சில கடத்திவரப்பட அதனை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து விலங்குகளை தாய்லாந்துக்கே அனுப்பிவைத்துவிட்டு அதனை கடத்தி வந்தவரை கைது செய்துள்ளது.
செக் இன் பேக்கேஜில் இருந்த விலங்குகள்:
தாய்லாந்தில் இருந்துவந்த பயணி ஒருவரின் செக் இன் பேக்கில் விநோதமான உருவங்கள் நெளிவது ஸ்கேனிங் செய்யும் போது தெரிந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பையை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதனுள் அரிய வகை கீரிப்பிள்ளைகள் சிலவும், கஸ்கஸ் எனப்படும் விலங்குகளும் இருந்தன. மொத்த 5 விலங்குகள் இருந்தன.
காமன் ட்வார்ஃப் மங்கூஸ் எனப்படும் இந்த வகை கீரி தென் ஆஃப்ரிக்காவின் அங்கோலா, வடக்கு நமிபியா, க்வாஸுலு நடால் பகுதிகளில் வசிப்பவை. கிழக்கு ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவிலும் இவை இருக்கின்றன. இவற்றிற்கு மென்மையான ரோமம் உண்டு.மஞ்சள் அல்லது அடர் பழுப்பு நிறங்களில் இந்த ரோமம் இருக்கும். இதற்கு ஊசி மூஞ்சியும் சிறிய காதுகளும் இருக்கும்.நீண்ட வால்,குட்டையான் கால்கள், அதில் நீண்ட நகங்களும் உண்டு.
அதேபோல் காமன் ஸ்பாட்டட் கஸ்கஸ் என்ற விலங்குகளும் அந்தப் பையில் இருந்தன. இவற்றை ஒயிட் கஸ்கஸ் என்றும் அழைக்கின்றனர். இவை ஆஸ்திரேலியாவின் கேப் யார்க் பகுதி, நியூ கினியா போன்ற இடங்களில் வசிக்கின்றன. இவற்றிற்கும் மிருதுவான ரோமம் உண்டு. நீண்ட வால்கள் உண்டு. இந்த இரண்டு விலங்குகளுமே எதற்காக கடத்தப்பட்டன என்பது தெரியவில்லை. கடத்தல்காரரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சில நேரங்களில் பெருமளவில் வேறேதும் பொருள் கடத்தப்படும்போது இது மாதிரியான திசை திருப்பும் சம்பவங்களும் நடைபெறும் என்று விவரமறிந்தவர்கள் கூறுகின்றன.
சிலர் வெளிநாட்டிலிருந்து விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்க வாங்கி வருவார்கள். வெளிநாட்டில் இருந்து வனவிலங்கு போன்ற உயிரினங்களை வாங்கி வரும்போது சர்வதேச வன விலங்கு பாதுகாப்பு துறையிடம் தெரிவித்து, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு துறைக்கும் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.
அந்த உயிரினங்களில் நோய் கிருமிகள் எதுவும் இல்லை என்ற மருத்துவ பரிசோதனை சான்றிதழும் வைத்திருக்க வேண்டும். முறையான மருத்துவ பரிசோதனை இல்லாமல் கொண்டு வந்தால் அந்த விலங்குகள் மூலம் நம் நாட்டு விலங்குகளுக்கு வெளிநாட்டு நோய் கிருமிகள் பரவும் ஆபத்து இருக்கும் என்பதால் அவற்றை உடனடியாக அந்த நாட்டிலிருந்து கொண்டு வரப்படுகிறதோ அங்கேயே அனுப்பிவிடுவார்கள். அதுபோல் கடத்தி வரப்படும் விலங்குகளையும் உடனடியாக அது எங்கிருந்து கொண்டு வரப்படுகிறதோ அங்கேயே அனுப்பிவிடுவார்கள். அப்படித்தான் தாய்லாந்தில் இருந்து வந்த பயணி கடத்திவந்த விலங்குகளும் உடனே அங்கேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.