இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்டது. இதனால் சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊரை நோக்கி நேற்று முன்தினம்  முதல் புறப்பட்டனர். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பெரியளவில் கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகை பெரியளவில் கொண்டாட மக்கள் தயாராகி சொந்த ஊருக்கு சென்றனர்.


பாட்டாளி மக்கள் கட்சி  தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா. இவர், நேற்று முன்தினம் காலை, சென்னையில் இருந்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு, டொயோட்டா இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் - சென்னை சாலையில் உள்ள பாதிரிகிராமம் தேசிய நெடுஞ்சாலையில் காலை 10.30 மணிக்கு கார் வந்த போது, சாலையோரம் உள்ள டீக்கடையிலிருந்து திருச்சி நோக்கிச் செல்வதற்காக கார் ஒன்று, மெயின் ரோட்டிற்கு திடீரென திரும்பியது. அப்போது, பின்னால் அடுத்தடுத்து வந்த இரண்டு கார்களின் டிரைவர்கள், அந்த கார் மீது மோதாமல் இருக்க 'பிரேக்' போட்டனர்.


அதுபோல, சவுமியா வந்த காரின் டிரைவரும் பிரேக் போட்டார். இதனால், பின் தொடர்ந்து வந்த மற்றொரு கார், சவுமியா காரின் பின்பக்கம் மோதியது. இந்த விபத்தில் காரின் முன் மற்றும் பின் பகுதி லேசான சேதம் அடைந்தது. எனினும் சவுமியா அன்புமணி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் 10 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார், போக்குவரத்தை சீரமைத்தனர். கார் விபத்தில் சிக்கியது தொடர்பாக தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.