பாஜக தமிழகத்தில் 2026-இல் ஆட்சியமைக்கும் என்று பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை கிண்டலடித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்திருந்தார். அதற்கு அண்ணாமலையும் ட்விட்டரிலேயே பதிலடி கொடுத்துள்ளார்.


முன்னதாக, திருப்பூர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகத் திறப்பு விழா திருப்பூர் வித்யாலயம் பகுதியில் நேற்று புதன்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில், கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு கட்சி அலுவலகங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  தற்போது, திருநெல்வேலி, திருப்பத்தூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் பாஜக அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.


இந்த நிகழ்ச்சியில் பேசிய, பாஜக தலைவர் அண்ணாமலை,  தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்றால், மாவட்டந்தோறும் அலுவலகங்கள் அமைய வேண்டும். 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும். வரும் உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி, அனைத்துத் தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற, இந்த அலுவலகக் கட்டிடங்கள் நமக்குப் பயன்படும் என்று பேசியிருந்தார்.





இதனைக் குறிப்பிட்டு ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கட்சி எழும்புகிறதோ இல்லையோ, கட்டிடங்கள் எழும்புகின்றன! நான்கு நகரங்களில் மாவட்டக் கட்சி்யின் புதிய, பெருமதிப்புள்ள அலுவலகக் கட்டிடங்களை ஒரே நாளில் திறக்கும் கட்சிக்குப் பாராட்டுக்கள்" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆயிரம் ஓட்டைகள் இருக்கக்கூடிய கப்பல் உங்கள் கட்சி. அதிலே தத்தளித்து, இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள். உங்களுடைய நகைச்சுவையை தாண்டி, நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றோம் என்று உங்களுக்கு தெரியும்." என்று பதிலளித்துள்ளார்.






இந்த ட்வீட்களை வைத்து காங்கிரஸ், பாஜக தொண்டர்களும், பொதுவான ரசிகர்களும் மாறி மாறி கருத்துகளைப் பகிர்ந்து ட்விட்டரை அதகளப்படுத்தி வருகின்றனர்.