கோயம்பேடு சந்தையில் கிலோ 110 ரூபாய்க்கு விற்பனையான தக்காளியின் விலை தற்போது ரூ.80 ஆக குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


நாம் அன்றாடம் சமைக்கும் உணவுப்பொருள்களில் தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாமல் இருக்கவே முடியாது. அந்தளவிற்கு சமையலில் முக்கியப்பங்கு வகிக்கிறது. சாம்பார், ரசம், சிக்கன், மட்டன் என எது சமைத்தாலும் தக்காளி இல்லாமல் சமைக்கவே முடியாது. அந்தளவிற்கு தக்காளி நம் உணவுக்கலாச்சாரத்தில் பயணித்து வருகிறது. இதில் எண்ணற்ற பல மருத்துவக்குணங்களும் உள்ளது. இதெல்லாம் இருந்தாலும் கடந்த சில தினங்களாக பெண்கள் அதிகளவில் இணையத்தில் தேடிய விஷயம், “தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது“ எப்படி? என்று தான். இதோடு மட்டுமின்றி பெட்ரோல், டீசல் விலையை விட்டு உயர்ந்திருந்தமையால் நான்தான் ரவுடி என்று தக்காளி சொல்வது போல பல மீம்ஸ்கள் வந்தமையெல்லாம் பார்த்திருத்தோம்.



ஆம் அதிக மழைப்பொழிவு மற்றும் குறைந்த விளைச்சல் காரணமாக நேற்று வரை நேற்று வரை ஒரு கிலோ தக்காளியின் விலை ரூபாய் 120க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. சில்லறை விலையில் ரூ.150 வரைக்கூட விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த மன வேதனையில் இருந்தனர். ஆனாலும் வேறு வழியின்றி குறைந்த அளவில் தக்காளிகளை வாங்கி சமைத்து வந்தனர்.


இந்நிலையில் தான் தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து தமிழக அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்களெல்லாம் நடைபெற்றது. பின்னர் தமிழக கூட்டுறவு பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் தக்காளி குறைந்த விலைக்கு விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 60-க்கும் மேற்பட்ட பசுமை பண்ணை மூலம் தக்காளி கிலோ ரூ. 79-க்கு  விற்பனை செய்யப்பட்டுவந்தது. குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரை மொத்தம் 40 கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனையானது.



இந்த சூழலில்தான் இன்று கோயம்பேடு சந்தைக்கு 45 லாரிகளின் மூலம் தக்காளி கொண்டுவரப்பட்டது. இதுவரை 30 லாரிகளில் மட்டுமே வந்தமையால் இதன் விலை அதிகரித்த நிலையில், தற்போது கிலோ ரூ.80-க்கு குறைந்துள்ளது. இதனால் மக்கள் ஓரளவிற்கு மகிழ்ச்சியில் உள்ளனர். தக்காளிகளை ஆர்வத்துடன் மார்க்கெட்டிற்கு சென்று வாங்கியும் வருகின்றனர். இருந்தப்போதும்  தக்காளி விலையை இன்னமும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் மழையின் காரணமாக தக்காளி விலை அதிகரித்துள்ள நிலையில், மழை இல்லாத மற்ற மாநிலங்களிலிருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தாலும் இதனை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.