ஒருவர் நல்லது செய்தால், அதனை எதிர்ப்பதற்காகவே ஒரு கூட்டம் இருக்கும். அது போல் தான் தஞ்சாவூரில் ஒரு கூட்டம் இயங்கி வருகிறது. வளர்ச்சி பெற்றவர்களை பற்றி விமர்சனங்கள் வந்தால் தான் அவர்களது வளர்ச்சி தெரியும். தஞ்சாவூர் பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க நகராகும். தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தஞ்சாவூர் தலைநகரமாகும். காவேரி டெல்டா பகுதியில் தஞ்சாவூர் முக்கிய விவசாய பகுதியாகவும், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகவும்  விளங்குகிறது. தஞ்சாவூர் மாநகராட்சி 51 வார்டுகளையும், 36.33 சதுர கிலோ மீட்ட பரப்பளவு கொண்டதாகவும் உள்ளது. மேலும் 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2,22,619 மக்கள் தொகையை கொண்டுள்ளது.





தஞ்சாவூர் நகராட்சியை அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா,110 விதியின் கீழ் மாநகராட்சியாக  19.2.2014 முதல் மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. தஞ்சாவூரை மாநகராட்சியாக அறிவிக்கும்போது ஒரு பேரூராட்சியும், 11 ஊராட்சிகளும் இந்த மாநகராட்சியுடன் இணைக்கப்படும் எனவும், இணைக்கப்பட்ட பின் மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 128.02 சதுர கிலோ மீட்டர் கொண்டதாகவும்,மொத்த மக்கள்தொகை 351655 ஆகவும், அதனுடைய ஆண்டு வருவாய் 6016.99 இலட்சமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சியில் 2019 ஆம் ஆண்டு முதல் ஆணையராக இருந்த ஜானதிரவீந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று சென்றதால், ஆணையராக சரவணகுமார் கடந்த 2021 ஜூலை மாதம் பதவியேற்று கொண்டார். பின்னர், மாநகராட்சியின் நடவடிக்கைகள், செயல்பாடுகளை கண்காணித்து வந்கார். ஆனால் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் பாக்கி இருப்பதாக தெரிய வந்தது. இதனையடுத்து, கடந்த மாதம் தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்திற்கு, பொது மக்கள் போல் சென்று, அங்குள்ள கடைகளில், வாடகை, யார் உரிமையாளர் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சேகரித்தார்.


இதில், ஏராளமான கடை உரிமையாளர்கள், மாநகராட்சியில் குறைந்த வாடகைக்கு கடைஎடுத்து கொண்டு, கூடுதல் வாடகைக்கு விடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்த தகவலையடுத்து ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி பழைய பஸ் நிலையத்தை ஏலம் விடுவதற்காக அறிவித்தார். ஆனால் வணிகர்கள், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர், சாலை மறியல், தரையில் அமர்ந்து போராட்டம், முற்றுகை போராட்டமங்களில் ஈடுபட்டனர். அப்போது ஆளுங்கட்சி முதல் அனைத்து கட்சியினரும், வணிகர்களும், ஆணையரை மாற்ற வேண்டும் என போராட்டத்தின் போது, கோஷமிட்டனர். ஆனால் ஆணையர் சரவணகுமார், எதற்கும் கலங்காமல், திட்டமிட்டபடி ஏலம் நடத்தி முடித்தார். இதில் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.



இதனால் ஆணையர் சரவண குமாரை பற்றி, வாட்ஸ் ஆப் பதிவில் மிகவும் மோசமாகவும் பதிவு செய்து அனுப்பி வந்தனர். தொடர்ந்து, கடந்த 21ஆம் தேதி,  தஞ்சாவூர் மாநகர முழுவதும், தமிழக அரசே, தமிழக அரசே, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கி, சட்டத்தை மீறி நியாய தர்மத்தை மீறி, தன்னிச்சையாக செயல்பட்டுவரும் தஞ்சை மாநகராட்சி ஆணையரை கண்டிக்கின்றோம். திரும்ப பெறு, திரும்ப பெறு தஞ்சை மாநகராட்சி ஆணையரை திரும்ப பெறு. இவண் வணிகர்கள், பழைய, புதிய பேருந்து நிலையம், தஞ்சாவூர் என சுவரொட்டியில் ஒட்டப்பட்டிருந்தது.


இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாநகரம் முழுவதும்,  வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம். தஞ்சாவூர் மாநகாராட்சி ஆணையர் அவர்களை 200 கோடி சொத்துக்களை மீட்டு தஞ்சை மாநகாராட்சியின் நிதி நிலையை பெருக்கி, தஞ்சையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்படும் மக்கள் சேவகர் மாநகராட்சி ஆணையரின் சேவை தஞ்சை மக்களுக்கு தேவை. அழகிகுளம் பராமரிப்பு குழு. கவாஸ்காரத்தெரு-தஞ்சை என அச்சிட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.




இதனால் தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் பொது மக்கள் ஆதரவாகவும், வணிகர்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பாக உள்ளார்கள் என மாநகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இது குறித்து மாநகராட்சி அலுவலர் கூறுகையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் ஏலம் போன்ற எந்த நிகழ்ச்சி நடந்தாலும், மேலிடத்திலிருந்து ஒரு போன் வரும். உடனே அந்நிகழ்ச்சி நின்று விடும். அல்லது மேலிடம் சொல்பவர்களுக்கு காரியங்கள் செய்து தர வேண்டும். இல்லை என்றால், இடமாற்றம். ஆனால் தற்போதுள்ள ஆணையர் சரவணகுமார், யாருக்கும் அஞ்சாமல், நேர்மையாக தனது பணியினை செய்து வருகிறார். இதனால் மாநகராட்சிக்கு வருவாய் பெருகியுள்ளது. மாவட்ட ஆட்சியர்களாக இருந்த சுப்பையன், அண்ணாதுரை ஆகியோர், கீழவாசல் உள்ளிட்டபகுதிகளில் உள்ள சாலை, இடநெருக்கடி, லீசுக்கு எடுத்துள்ள கட்டிடங்கள் குறித்து கேட்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்தார்கள். ஆனால் அதற்குள் அவர்கள் இருவரும் மாற்றலாகி சென்று விட்டனர். ஒருவர் நல்லது செய்தால், அதனை எதிர்ப்பதற்காகவே ஒரு கூட்டம் இருக்கும். அது போல் தான் தஞ்சாவூரில் ஒரு கூட்டம் இயங்கி வருகிறது. வளர்ச்சி பெற்றவர்களை பற்றி விமர்சனங்கள் வந்தால் தான் அவர்களது வளர்ச்சி தெரியும் என்றார்.