விநாயகர் சதுர்த்தி விழா


இந்துகளின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் 18ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாட்டின் அனைத்து நகரம் மற்றும் கிராமங்களிலும் பெரிய அளவில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட உள்ளனர். இதையொட்டி கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தானிய வகைகளைக் கொண்டு விநாயகர் ஓவியம் வரைந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் பாணாம்பட்டு பாலாஜி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த  சாந்தா என்பவர்  தானிய வகைகளைக் கொண்டு விநாயகர் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.




விநாயகர் சதுர்த்தி பண்டிகை இந்துக்களின் முக்கிய பண்டிகை ஆகும். அந்த வகையில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா  18-ந் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொருவரும் தங்களின் திறமைக்கேற்ப விநாயகர் உருவ பொம்மைகள்,  ஓவியங்கள் செய்து அசத்தி வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் பானாம்பட்டு பகுதியை சேர்ந்த சாந்தா என்பவர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஓவியர் ஆசிரியராக 2 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இவர் ஒவ்வொரு வருடம் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வித்தியாசமான முறையில் விநாயகர் உருவ படத்தை ஓவியமாக வரைந்து அசத்தி வருகிறார்.




 அந்த வகையில் இந்த வருடம் கேழ்வரகு,கம்பு,சோளம், பருப்பு, அரிசி, நெல் ஆகிய நவதானியங்களை கொண்டு விநாயகர் உருவப்படத்தை வரைந்து உள்ளார். இந்த விநாயகர் உருவ படத்தை தொடர்ந்து மூன்று நாட்களாக வரைந்து உள்ளார். இந்த விநாயகர் உருவ படம் வரைந்த நோக்கம் என்னவென்றால், வளரும் இளைய தலைமுறையினர் அனைவரும் சிறந்த கற்பனை திறன்  வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், அனைத்து பொருட்கள் கொண்டு கலை நயமான பொருட்களை உருவாக்கலாம் என தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், நவதானியத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த கருத்து கூறும் உருவ விநாயகர் ஓவியத்தை வரைந்து உள்ளேன் என சாந்தான் கூறினர்.




விழுப்புரம் மாவட்டத்தில் சிலை தயாரிப்பு 


அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஓமிப்போர், கிளப்பாக்கம், மற்றும் அய்யூர் அகரம், அய்யங்கோவில்பட்டு, சிந்தாமணி, வளவனூர், திருவாமாத்தூர், பனையபுரம், மடப்பட்டு உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



சிங்கத்தின் மீது விநாயகர், சிவன், பார்வதியுடன் இருப்பது போன்ற விநாயகர், 3 தலையுடன் இருக்கும் விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர், மாட்டு வண்டிகளில் அமர்ந்தபடி செல்வது போன்ற விநாயகர், ஐந்துமுக சிங்க விநாயகர், நந்தி விநாயகர், மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்வது போன்ற விநாயகர், வலம்புரி விநாயகர், குபேந்திரருடன் இருக்கும் விநாயகர், 5 தலை நாகத்துடன் இருக்கும் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் 2 அடி முதல் 13 அடி உயரம் வரை விதவிதமான வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.


சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் சிலை தயாரிப்பு 


இதுகுறித்து சிலை தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலும், ரசாயன பொருட்களை கலக்காமலும், நீர் நிலைகளில் கரையும் தன்மையுள்ள சிலைகளை தயாரித்து வர்ணம் பூசி வருகிறோம். விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் சிலைகள் கேட்டு ஆர்டர் கொடுத்து வருகின்றனர் எனவும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை சற்று அதிகரிக்க கூடும் என தெரிவித்தார்.