பகுத்தறிவு தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் சமூக நீதி நாளாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளையொட்டி சேலத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சமூக நீதி நாள் உறுதி மொழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசிக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



அவரைத் தொடர்ந்து, பெரியாரின் பிறந்த நாளையொட்டி சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு, அதிமுக சார்பில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.



பின்னர், சேலம் சின்ன சீரகாபாடி பகுதியில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு திமுக துணை பொதுச்செயலாளர் ஆ ராசா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் திமுக கொடி ஏற்றி வைத்து பொதுமக்கள், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். இதில் திமுககட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான பங்கேற்றனர்.



இந்த நிலையில் சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் கேட்டரிங் வைத்து நடத்தி வருகிறார். மேலும் தினேஷ் பெரியார் கொள்கையாளராக செயல்பட்டு வருகிறார். இவர் ராசிபுரம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் காதலித்த பெண் ஆன்மீக முறைப்படி திருமணம் செய்துகொள்ள விருப்பப்பட்ட நிலையில், காதலி, பெற்றோர்கள், உறவினர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருவரும் இன்றையதினம் ஆன்மீக முறைப்படி திருக்கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பெரியார் கொள்கையாளரான தினேஷ் பெரியார் சிலை முன்பு மாலை மாற்றி திருமணம் செய்ய விருப்பப்பட்டதால், காதலி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தினேஷின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டதால், தினேஷ் தனலட்சுமி ஜோடி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, இருவரும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர். இரு மனங்களும் அவர்கள் விருப்பப்பட்ட படியே திருமணம் செய்து கொண்டது அனைவரையும் கவர்ந்தது. ஆண் பெண் இருவரும் சமம் என்பதை உணர்த்தும் புனிதமாக பெரியார் சிலை முன்பாக மாலை மாற்றிக்கொண்டு சமத்துவ திருமணம் செய்ததாக மணமகன் கூறினார்.