கார், வேன், பேருந்து அடுத்தடுத்து மோதல்: 


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கார், வேன், பேருந்து ஆகிய மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மதுரையிலிருந்து, நேற்று மேல்மருவத்தூருக்கு உறவினரின் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேனில் சென்றுள்ளனர். மீண்டும் நிகழ்ச்சி முடிந்தவுடன் இன்று மாலை மேல் மருவத்தூரில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது திண்டிவனம் கருணாவூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விழுப்புரம் மார்க்கமாக இருந்து வந்த கார் திடீரென திரும்பி உள்ளது. அப்போது வேன், கார் மீது மோதியது.


15 வயது சிறுவன் உயிரிழப்பு 


இதில் வேனின் பின்னால் வந்த சொகுசு பேருந்து வேன் மீது அதி வேகமாக மோதியதில் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் வந்த மதுரை ஜெக்கானூர் பகுதியை சேர்ந்த பாலுசாமி மகன் தேவேந்திரன்(50), அதே பகுதியை சேர்ந்த தனபாண்டி மகன் கோகுல்(15) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். பலத்த காயமடைந்த கோகுல் உள்ளிட்ட 5 பேரை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக முண்டையம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், தேவேந்திரன் உள்ளிட்ட 6 பேரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


இதில் 15 வயது சிறுவன் கோகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த விபத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் கிரேன் மூலம் சாலையில் கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்தி போலீசார், போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


 




கர்நாடக முதல்வரை, முதல்வர் ஸ்டாலின் நட்பு ரீதியில் நேரில் சந்தித்து தண்ணீர் கேட்கவேண்டும் - அன்புமணி ராமதாஸ்


அண்ணாமலை பாதயாத்திரை.. அது பாதயாத்திரையா, வசூல் யாத்திரையா? கொந்தளித்த சிவி சண்முகம்