செம்மண் குவாரி வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
கடந்த 2006-11ஆம் ஆண்டு காலத்தில் தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு 28 கோடியே 37 லட்சத்து 65 ஆயிரத்து 600 ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக, தற்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி எம்பியுமான பொன். கெளதமசிகாமணி, கட்சி நிர்வாகிகள் கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில், கவுதமசிகாமணி எம்.பி தொடர்ந்த வழக்கு, கடந்த மாதம் 19ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை, தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழக்கு 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகியோர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அமலாக்கத்துறையில் சிக்கிய செந்தில் பாலாஜி:-
அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து கடந்த மாதம் 13ம் தேதி நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதைதொடர்ந்து, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, இதயகோளாறு காரணமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. குறிப்பாக அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி, செந்தில் பாலாஜியின் கைது செல்லும், அவரை காவலில் எடுத்து விசாரிப்பதில் தவறு இல்லை என தீர்ப்பளித்தார். இதையடுத்து, மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ள செந்தில் பாலாஜி, எந்தநேரத்திலும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்த இரண்டாவது தமிழக அமைச்சராக பொன்முடி மாறியுள்ளார்.