விழுப்புரம்: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கில், வேலூர் நீதிமன்றம் விடுவித்தது. மேலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாமியார் பெயரில் சொத்து வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கிலும் சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்தது.



இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பூத்துறையில் அளவுக்கு மீறி செம்மண் வெட்டி எடுத்ததாகவும் இதனால் அரசுக்கு ரூபாய் 28 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதமசிகாமணி எம்பி உள்ளிட்டவர்கள் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த வழக்கு மட்டுமே நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இது சம்பந்தமாக அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த வழக்கை சுட்டிக்காட்டி எப்போது வேண்டுமானாலும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாகத்துறை சோதனை நடத்தலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


ஏற்கனவே அந்நிய செலவாணி வழக்கில் அமைச்சர் பொன்முடி மகன் கௌதமசிகாமணி எம்.பியின் பல கோடி பணம் முடக்கி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தான் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


செம்மண் குவாரி வழக்கு:


கடந்த 2006-11ஆம் ஆண்டு காலத்தில் தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு 28 கோடியே 37 லட்சத்து 65 ஆயிரத்து 600 ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக, தற்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி எம்பியுமான பொன். கெளதமசிகாமணி, கட்சி நிர்வாகிகள் கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்தனர். 


இவ்வழக்கின் விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில், கவுதமசிகாமணி எம்.பி., தொடர்ந்த வழக்கு, கடந்த மாதம் 19ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, விழுப்புரம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை, தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழக்கு 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகியோர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.