விழுப்புரத்தில் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தில் பெரும்பாலான கடைகள் காலியாக கிடக்கின்றன. வாடகை உயர்வால் மகளிர் சுய உதவிக்குழுவினர் அங்கு செல்ல தயங்குகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பூமாலை வணிக வளாகத்தை புனரமைக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.


அதனடிப்படையில் விழுப்புரம் பூமாலை வணிக வளாகம் ரூ.35 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. இதன் தரைத்தளத்தில் 11 கடைகளும், முதல் தளத்தில் 11 கடைகளும் என மொத்தம் 22 கடைகளுடன் சீரமைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இங்கு வரும் மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களின் வசதிக்காக குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்சார வசதி, காற்றோட்டமான வசதி என அனைத்து அடிப்படை வசதிகளுடனும் புனரமைக்கப்பட்டது.



இதையடுத்து இந்த பூமாலை வணிக வளாகம், கடந்த மாதம் 28-ந் தேதியன்று திறக்கப்பட்டது. அன்று அதன் தரைத்தளத்தில் உள்ள 11 கடைகளிலும் மகளிர் சுய உதவிக்குழுவினர், தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்தனர். இதன் முதல் விற்பனையை கூடுதல் ஆட்சியர் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர். ஆனால் புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகம் திறக்கப்பட்ட மறுநாளே அவ்வளாகத்தில் சுய உதவிக்குழுவினர், தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய வரவில்லை. இந்த வணிக வளாகம் திறக்கப்பட்டு 33 நாட்களாகியும் மகளிர் சுய உதவிக்குழுவினர் வராததால் அவ்வளாகத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் பூட்டியே கிடக்கின்றன. அங்கு மொத்தமுள்ள 22 கடைகளில் தற்போது வெறும் 4 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு அதில் மகளிர் சுய உதவிக்குழுவினர், தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.




திறப்பு விழா நாளின்போது, அங்குள்ள தரைத்தளத்தில் 11 கடைகளும் இயங்கிய நிலையில் அதன் மறுநாளில் இருந்து அந்த கடைகள் காலியாகி தற்போது பூட்டிக்கிடக்கின்றன. இதனால் பொருட்களை வாங்கச்செல்லும் பொதுமக்கள் பலரும், பூமாலை வணிக வளாகத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் பூட்டிக்கிடப்பதால் பொருட்களை வாங்க முடியாமல் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டபோதிலும் அங்கு கடைகள் நடத்த மகளிர் சுய உதவிக்குழுவினர் தயங்குவதால் அந்த பூமாலை வணிக வளாகமே வெறிச்சோடிய நிலையில் காட்சியளிக்கிறது.

இதுபற்றி மகளிர் சுய உதவிக்குழுவினர் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், கடந்த ஆட்சிக்காலத்தின் போது மகளிர் திட்டத்தின் சார்பில் நாங்கள் கடைகள் நடத்த இலவச அனுமதி வழங்கப்பட்டது. நாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை இங்கு கொண்டு வந்து வெளிமார்க்கெட் விலையை விட சற்று குறைத்து விற்பனை செய்தோம். இதனால் எங்களுக்கும் போதிய லாபம் கிடைத்தது. இதன் மூலம் பொதுமக்களும் பயனடைந்தனர். எங்களுக்கு கிடைக்கும் மாத வருவாயில் 5 சதவீதத்தை மின் கட்டணம் மற்றும் பூமாலை வணிக வளாக பராமரிப்புக்காக நாங்கள் கொடுத்து வந்தோம். இந்த சூழலில் தற்போது ஒவ்வொரு கடைக்கும் குறைந்தது ரூ.2,500 முதல் அதிகபட்சம் ரூ.3,750 வரை வாடகை நிர்ணயம் செய்துள்ளனர்.


இந்த வாடகையை தவிர மின் கட்டணத்தையும் நாங்களே செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் மாத வாடகை, மின் கட்டணம் என்று பார்த்தால் நாங்கள் ஒவ்வொருவரும் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை ஒதுக்க வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் வெளிமார்க்கெட்டில் விற்கப்படும் விலைக்கு இணையாக, நாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை இங்கு விற்பனை செய்தால் மட்டும்தான் எங்களுக்கு போதிய வருவாய் கிடைக்கும். ஆனால் மலிவு விலையில் விற்க வேண்டும் என்று மகளிர் திட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


அதுபோல் நாங்கள் உற்பத்தி செய்யும் கைவினை பொருட்களை மட்டுமே இங்குள்ள பூமாலை வணிக வளாகத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்றும், வெளிமாவட்டங்களில் இருந்து பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யவோ, இதர பொருட்களையோ விற்பனை செய்ய அனுமதி கிடையாது என்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இவ்வாறு விற்பனை செய்வது எங்களுக்கு சாத்தியமில்லாத ஒன்று, நாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை தயாரிக்க செலவு செய்த முதலீட்டு தொகையை கூட எங்களுக்கு கிடைக்காமல் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை வரும். எனவே இதுபோன்ற காரணங்களால்தான் இங்குள்ள பூமாலை வணிக வளாகத்தில் கடைகள் நடத்த தயக்கமடைந்து வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு எங்களுக்கு இலவசமாக கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டும் அல்லது வாடகையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.