விழுப்புரம் : செஞ்சி அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கார் மர்மமான முறையில்  திடீரென தீப்பற்றி எரிந்து. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எந்தவித காரணமும் இல்லாமல் கார் தீப்பற்றி எரிந்தது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பரதன்தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவர் மின்சார வாரியத்தில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவரது வீட்டு வாசலில் உயர்ரக சைலோ காரை நிறுத்தி வைத்திருந்தார். திடீரென அந்த கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மர்மமான முறையில் திடீரென கார் எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


தொடர்ந்து இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும், செஞ்சி தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கார் முழுவதும் எரிந்து தீக்கிரையானது. காரின் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை  காலம் என்பதால், தீ விபத்து பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்டதா, அல்லது தீப்பற்றக்கூடிய வேறு ஏதாவது பொருட்கள் கார்மேல் பட்டு தீப்பற்றியதா என்ற பல கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். வாகனங்கள் இப்படி திடீரென தீப்பற்றி எரிவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர், கூடுவாஞ்சேரி மற்றும் விழுப்புரம் பகுதியில் சாலையில் பயணித்துக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.