விழுப்புரம்: செஞ்சி அருகே அனுமதியின்றி அம்பேத்கர் சிலையை விடுதலை சிறுத்தை கட்சியினர் திறந்ததால் மணிவிழாவில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியேறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று செஞ்சி பகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதில் செஞ்சி அடுத்த மீனம்பூர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், அவர் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்தார். பின்னர் காரை கிராமத்தில் அம்பேத்கர் படிப்பகம் திறப்பு விழா மற்றும் மணிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அம்பேத்கர் படிப்பகத்தை திறந்து வைத்தார்.
மேலும், விடுதலை சிறுத்தை கட்சியினர் அரசு புறம்போக்கு இடத்தில் அம்பேத்கர் சிலை அமைத்ததால் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை, சிலை அமைந்திருக்கும் இடத்தை ஒட்டியுள்ள அம்பேத்கர் நூலகத்தை திருமாவளவன் நேற்று திறப்பதாக விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏற்பாடு செய்தனர்.
விழாவின்போது சிலையை திறந்து விடக்கூடாது என்பதற்காக வருவாய்த்துறையினர் முன்கூட்டியே விழா ஏற்பாடுகளை அழைத்து சிலையை திறக்க அனுமதி இல்லை என்றும் சிலையை துணியால் மூடி வைக்குமாறு கூறினார். இதனையடுத்து சிலையை துணியால் மூடி கட்டப்பட்டது. டிஎஸ்பி பிரியதர்ஷினி மற்றும் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் முகாமிடடனர்.
திருமாவளவன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் வந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மூடப்பட்டு இருந்த சிலையில் மாலை அணிவித்தனர். இதில் அதிருப்தி அடைந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் அங்கிருந்து வெளியேறினார். இதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அமைச்சர் செந்தில் மஸ்தானை சமரசம் செய்து அழைத்துவந்து, சிலை மூடப்பட்டு அருகில் இருந்த அம்பேத்கர் நூலகம் திறக்கப்பட்டது.