Vikravandi By-Election: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.


இன்றுடன் கடைசி நாள்:


விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை, 5 மணியுடன் ஓய்கிறது. தேர்தல் ஆணைய விதிகளின் படி, அந்த நேரத்திற்கு பிறகு யாரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக் கூடாது. மற்றும் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதனிடையே, கடைசி நாளான இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, பாமக தலைவர் அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். கடைசி நாள் என்பதால் இன்றைய வாக்கு சேகரிப்பு தீவிரமாக இருக்கும் என கருதப்படுகிறது. 


அனல் பறந்த தேர்தல் பரப்புரை:


விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை கடந்த ஒருவார காலமாக அனல் பறக்கிறது. திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். கூட்டணியில் உள்ள திருமாவளவனும் திமுக வேட்பாளருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். அதேநேரம், பாமக வேட்பாளரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டடோரும், அன்புமணி தனது குடும்பத்துடனும் விக்கிரவாண்டி தொகுதியில் தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரித்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்காக சீமானும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.


களத்தில் 29 வேட்பாளர்கள்:


கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர்  உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த தொகுதியில் வரும் 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து, பதிவான வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. 


இடைதேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணி சார்பில் பாமகவின் சி. அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். வாக்குப்பதிவை முன்னிட்டு வரும் 10-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்துக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 10-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..