சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அலுவலரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆறுமுகம் என்பவர் மிகவும் கடுமையான வார்த்தைகளை பேசி மிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 


விடுதலை சிறுத்தைகள் நிர்வாகியின் இந்த செயலுக்கு அரசு ஊழியர் சங்கத்தினரும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அலுவலத்திற்கு உள்ளேயே மிரட்டும் சம்பவதால் அதிகாரிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



முன்னதாக அலுவலத்திற்கு சென்ற அவருக்கு, பெண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். அதில், பண்ணப்பட்டி கிராமம் கங்கேயனூர் ஆதிதிராவிடர் காலணியை சேர்ந்தவர் 


ஆண்டி. இவர் பண்ணப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து கடந்த 2001 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அவரது மகன் பிரகாசம் என்பவர் கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு மனு செய்துள்ளார். தந்தை இறந்து மூன்று ஆண்டுக்குள் வாரிசு வேலை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், பிரகாசம் ஐந்து ஆண்டுகள் கழித்து வாரிசு வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளார். குடும்ப வாரிசுகள் மூலம் ஒருங்கிணைந்த சான்று 2023 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். இந்த மனு வட்டாட்சியர், மேட்டூர் சார் ஆட்சியார், சேலம் மாவட்ட ஆட்சியர் வரை சென்றுள்ளது. ஆய்வுக்கு பிறகு, மூன்று வருட காலத்திற்குள் விண்ணப்பிக்க வில்லை. அதற்குள் விண்ணப்பித்த விண்ணப்பங்கள் ஏதாவது இருந்தால் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். மேலும், அதற்கு ஆதாரம் ஏதும் இல்லாத நிலையிலும், வாரிசு வேலை மனு விசாரணையில் உள்ளதாக பெண் அதிகாரி கூறியுள்ளார். 



இந்த நிலையில், நேற்று மதியம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மண்டல துணை செயலாளர் ஆறுமுகம், காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகுந்து அங்கு பணிபுரியும் உதவியாளர் கலா என்பவரிடம், வாரிசு வேலை என்ன ஆச்சு, சம்பளம் வாங்குவதற்கு வேலை செய்யுங்கள் நீங்கள், எந்த சங்கத்தில் இருந்தாலும் எனக்கு பயமில்லை, போலீசை கூப்பிட்டாலும் எனக்கு பயமில்லை என்று ஒருமையில் திட்டி மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் காட்சிகள் அனைத்தும் சக ஊழியர்களால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் அரசு அலுவலகத்திற்குள் புகுந்து அரசு ஊழியரை தரக்குறைவாக பேசியது, மிரட்டியது உள்ளிட்டவைகளை பலரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.