vikravandi By-Election: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்று தொடங்கி வரும் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.
விக்கிரவாண்டி இடைதேர்தல் - வேட்புமனு தாக்கல்:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான, வாக்குப்பதிவு வரும் ஜுலை 10ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அப்படி பதிவாகும் வாக்குகள் ஜுலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடுவோர் விருப்பமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று தொடங்குகிறது. தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். அதன்படி, வரும் 21ம் தேதி வரை விருப்பமுள்ள நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்:
தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் வரும் 24ம் தேதி பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் மற்றும் 26ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் செய்து வருகின்றனர். வேட்பு மனுத்தாக்கலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் நபருடன் சேர்த்து மொத்தம் 5 பேர் மட்டுமே தேர்தல் அலுவலகமான விக்கிர வாண்டி தாலுகா அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
தீவிர கட்டுப்பாடுகள்:
வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் வரும் மற்ற அனைவரும் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் தடுத்து நிறுத்தப்படும் என்பன போன்ற விதிகள் தீவிரமாக பின்பற்றப்படுகின்றன. இதனால் போலீசார் எல்லைக்கோடு வரைந்துள்ளதோடு, தடுப்புகளையும் அமைத்துள்ளனர். தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் வகையில் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் யார்?
திமுக சார்பில் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தலின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் வேட்பாளர் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பிலும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
இடைதேர்தல் ஏன்?
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து எட்டாம் தேதி முதல் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக ஒரு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ ஆறு மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைதேர்தல் நடைபெற உள்ளது.