தேமுதிக தலைவர் விஜயகாந்த் (Vijayakanth) உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்


உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர்,சகோதரர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். நல்ல திரைப்படக்கலைஞர்.... நல்ல அரசியல் தலைவர்.... நல்ல மனிதர்.... நல்ல சகோதரர்.... ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம். சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,தொண்டர்களுக்கும்,நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.


விசிக தலைவர் தொல்.திருமாவளவன்


தேமுதிக தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் மறைவு தமிழ் சினிமாவுக்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ரசிகர்கள், திரையுலகினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். 


பாஜக தலைவர் அண்ணாமலை 


தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர். தன்னலமற்ற தலைவர். தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்.


சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர். பாரதப் பிரதமர் பேரன்பைப் பெற்றவர். கேப்டன் விஜயகாந்த் அவர்களது மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது இன்னுயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும். கேப்டன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.


சமக தலைவர் சரத்குமார்


அன்பு நண்பர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். என்றாவது ஒருநாள் குணமடைந்து, என்றும் போல் கேப்டன் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்த என்னை போல், அவரை நேசித்த லட்சோபலட்ச மக்களை இச்செய்தி மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது. அவரை இழந்து மீளாத்துயரில் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழ்த் திரைக்கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும், தேமுதிக கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


எடப்பாடி பழனிசாமி 


தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான திரு.விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய திருமதி பிரேமலதா விஜயகாந்த் , குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் திரு.விஜயகாந்த் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.