தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 






அதில், “திரு விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது நடிப்பு மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அது நிரப்புவது என்பது கடினமானது. விஜயகாந்த் என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்தார், பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் இத்தருணத்தில் நினைவுகூர்கிறேன். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணம் முழுவதும் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களை பற்றி தான் உள்ளது” என தெரிவித்துள்ளார்.  


இதேபோல் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தேமுதிக-வின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் பெரும் ஆளுமையான, கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ளவர், தமிழக மக்கள் அனைவராலும் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்பட்டவர். அவரை இழந்துவாடும், குடும்பத்தினர், தேமுதிக தொண்டர்களுக்கும் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என கூறியுள்ளார். 




மேலும் படிக்க: Vijayakanth LIVE Update: விஜயகாந்த் மறைவு: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ராகுல்காந்தி இரங்கல்!