தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு, வரும் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்  நடைபெற உள்ள நிலையில், மாநாட்டை ஒருங்கிணைப்பதற்காக 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

அரசியல் களத்தில் தவெகவின் முதல் மாநாடு பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. மாநாடு தொடர்பாக நாளுக்கு நாள் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நேற்று ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியான நிலையில், இன்று மற்றொரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

234 தொகுதிகளிலும் ஸ்கெட்ச் போடும் விஜய்:

Continues below advertisement

இது தொடர்பாக தவெக வெளியிட்ட அறிக்கையில், "கழகத் தலைவர் அறிவித்தபடி. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா. வருகிற 27.10.2024 அன்று. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது.

மாநாட்டுக்கான களப் பணிகள் தொடர்ந்துவரும் நிலையில், தலைவர் விஜய்யின் ஆணைப்படி. சட்டமன்றத் தொகுதி அளவில் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க, மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித்தலைவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் ஒருங்கிணைந்து செயல்பட 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 2 பெண்கள் உள்பட மொத்தம் 7 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முழு மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். பொருளாதாரக் குழு தலைவராக கட்சியின் பொருளாளர் வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

எதிர்பார்ப்பை கிளப்பும் தவெக மாநாடு:

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவரது ஒவ்வொரு செயல்பாடுகளும் மக்களாலும், அரசியல் கட்சிகளாலும் கண்காணிக்கப்பட்டே வருகிறது. அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் இதுவரை த.வெ.க.வின் கொள்கை என்னவென்று இதுவரை கூறவில்லை.

விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிலே அவர் தனது கொள்கையை மக்கள் மத்தியில் கூற உள்ளார். தமிழ் தேசியம், திராவிடம், தேசியம் என பல கொள்கைகள் தமிழ்நாட்டின் அரசியலில் மோதிக் கொண்டு வரும் சூழலில், நடிகர் விஜய் எதை சார்ந்து இயங்கப் போகிறார்? என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக, பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனை அரசியல் இருந்து வருகிறது.