வடகிழக்கு பருவமழை - கட்டுப்பாடு மையத்தில் ஆய்வு


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மற்றும் கட்டளை மையத்தினையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 


இந்த ஆய்வின் போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மண்டல வாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 


பொது மக்கள் புகார் அளிக்க 1913 எண் 


சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுபாடு மற்றும் கட்டளை மையத்தில் எந்ததெந்த பகுதிகளில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது எனவும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படு்ம் புகார்களுக்கு எப்படி தீர்வு காணப்படுகிறது என்பது குறித்தும் அதிகாரிகள் துணை முதலமைச்சரிடம் விவரித்தனர். மேலும் இந்த கட்டுப்பாட்டு மையத்தில்  திரைகள் மூலமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள வானிலை நிலவரம் குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். 


தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அங்கு தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தொடர்ந்து சிசிடிவி கேமிரா மூலமாக கண்காணித்து வருவதாகவும் அந்த பகுதிகளில் மோட்டர் பம்புகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் துணை முதலமைச்சரிடம் விவரித்தனர். பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக 1913 என்ற உதவி எண்ணை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த எண்கள் மூலமாக மக்களிடம் பெறப்படும் புகார்களுக்கு துணை முதலமைச்சர் பதில் அளித்தார். 


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் நேரத்தில் மாநகராட்சி அலுவகத்தில் உள்ள இந்த கட்டுபாடு மற்றும் கட்டளை மையம் தான்  வார் ரூமாக ( War Room ) ஆக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளோடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைகளை மேற்கொண்டார். 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது


சென்னை மாநகராட்சிக்கு இருக்கக்கூடிய கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தில்  ஆய்வு மேற்கொண்டோம். தமிழகத்தில் அதிக கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.


மழைக் காலத்தில் பொதுமக்கள் புகார் அளிக்க 1913 என்ற உதவியின் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த கட்டுப்பாட்டு மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவசர உதவி என தவிர சமூக வலைத்தளம் மற்றும் வாட்ஸ் அப் மற்றும் நம்ம சென்னை தளம் மூலமாகவும் மழை பற்றி தகவல்கள் உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.  


தமிழ்நாடு அலர்ட் - புதிய செயலி


மழை காலங்களில் அரசுடன் இணைந்து 13 ஆயிரம் தன்னால்வர்கள் பணியாற்ற உள்ளனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்ததால் அதனை வெளியேற்றுவதற்காக 113 என்ற எண்ணிக்கையில் 100 எச்பி மோட்டாரர்களும் தாழ்வான பகுதிகள் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் நிவாரண மையங்களுக்கு தேவையான உணவு குடிநீர் உள்ளிட்ட விஷயங்களை அரசு அதிகாரியுடன் பேசி உறுதி செய்வார்கள். அரசு சார்பாக தமிழ்நாடு அலர்ட் என்ற புதிய செயலியை உருவாக்கி உள்ளோம். அதனை தரவிறக்கம் செய்து மழைக்குரிய தகவலை உடன் உடன் தெரிந்து கொள்ளலாம்.


வானிலை நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் ஓரிரு இடங்களில் வடகிழக்கு பருவமழைக்கான பணிகள் நிறைவடையாமல் இருந்தால் சுற்றி தடுப்புகள் அமைக்க உத்தரவிட்டிருக்கிறோம். பாதுகாப்பற்ற முறையில் இருக்கக்கூடிய இடங்களை பொதுமக்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக எங்களுக்கு தெரிவிக்கலாம். மற்ற மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் சென்னைக்கு வர வைக்கப்பட்டுள்ளனர்.


மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்


அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தரையின் மேல் செல்லக்கூடிய அனைத்து கேபிள்களையும் மண்ணுக்குள் புதைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தாழ்வான மின் மாற்றிகள் அதிக உயரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது தொடர்ந்து மின்சார துறைக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வர வைக்கப்பட உள்ளனர். மெட்ரோ குடிநீர் வாரியமும் 356 குடிநீர் மையமும் 24 மணி நேரமும் ஜெனரேட்டர் மூலமாக இயங்கி அதன் மூலம் தண்ணீர் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 673 ஜெனரேட்டர் இயந்திரங்கள் 83 கூடுதல் குடிநீர் லாரிகளும்  தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது . அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என தெரிவித்தார்.


சென்னையில் உள்ள அனைத்து கால்வாய்களும் தூர்வாரும் பணிகளும் நடைபெற்ற வருகிறது. தொடர்ச்சியாக  அந்தந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறேன் என கூறினார். மழை அளவு இரண்டு ஆண்டுகளை காட்டிலும் தற்போது அதிகமாக உள்ளது. ஆகாய தாமரை எடுக்க எடுக்க தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. தொடர்ந்து அதனை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.