சமீபத்தில் நடிகர் விஜய் குறித்த செய்திகள் அவரது அரசியல் வருகை குறித்ததாகவே இருக்கிறது. ஆனால் இது குறித்து நடிகர் விஜய் நேரடியாக பதில் அளிக்காமல் தனது செயல்கள் மூலம் சூசகமாக பதில் அளித்து வருகிறார்.
இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, அதனைக் கண்டித்து நடிகர் விஜயின் மக்கள் இயக்கம், பொதுக்கூட்டம் நடத்தியது. அதன் பின்னர் நடைபெற்ற 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுகவிற்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு அளித்தது. அப்போது நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதன் பின்னர் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து அதிகப்படியாக பேசப்படுகிறது.
அதற்கு ஏற்ற வகையில் நடிகர் விஜயும் தனது மக்கள் இயக்கத்தினைக் கொண்டு பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறார். மேலும் தனது திரைப்பட இசை வெளியீட்டு விழா மேடைகளை விஜய் தனக்கு தெரிந்த அரசியலை பேசும் பிரச்சார மேடையாக பயன்படுத்தி வந்தார். குறிப்பாக சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, “நான் முதலமைச்சரானால் ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிப்பேன்” என கூறினார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை அழைத்து பாராட்டி இருந்தார் நடிகர் விஜய். இந்நிலையில், நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கம் சார்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களை அவர்களின் பெற்றோருடன் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கியதுடன் ஊக்கத்தொகையும் வழங்கினார்.
அப்போது பேசிய நடிகர் விஜய், ”முதல் தலைமுறை வாக்காளர்கள் நீங்கள் தான், சரியான தலைவர்களுக்கு வாக்களித்து புதிய தலைவர்களை நீங்கள் தான் உருவாக்க வேண்டும்" என பேசினார். மேலும், "காசு வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என உங்கள் பெற்றோர்களிடம் நீங்கள் கூறுங்கள். பாடப்புத்தகங்களை மட்டும் படித்துக்கொண்டு இருக்க வேண்டாம். அம்பேத்கரைப் படியுங்கள், பெரியாரைப் படியுங்கள், காமராசரைப் படியுங்கள்” என கூறினார்.
இந்த நிகழ்விற்கு வந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் விஜயின் அரசியல் வருகை குறித்து பேசும் போது நடிகர் விஜய் அதனை ஏற்கும் விதமாகவே காணப்பட்டார். நடிகர்கள் அரசியலுக்கு வருவதென்பது அவரவர்கள் தனிப்பட்ட முடிவு. ஆனால் ஒரு அரசியல் கட்சிக்கு கொள்கை என்பது முக்கியம். அதுவும் ஏற்கனவே உள்ள கட்சிகளின் கொள்கைகளை விடவும் சிறந்ததாக இருக்க வேண்டும். தற்போது வரை விஜய் கூறியிருப்பது, ஓட்டுக்கு காசு வாங்காதீர்கள், ஊழலை ஒழிப்பேன் என்பது தான். ஆட்சியை பிடிப்பதெல்லாம் அடுத்த கட்டம் தான். ஒரு கட்சிக்கு அடிப்படையே கொள்கை தான். இந்தியாவிற்கே அரசியலில், முன்னோடி மாநிலமாக உள்ள தமிழ்நாட்டின் அரசியல் களம் அவ்வளவு எளிதானதல்ல. இங்கு அரசியல் செய்ய சமூகநீதி கருத்தியலில் உறுதியாக இருக்க வேண்டும், மாநில சுயாட்சி குறித்த தெளிவு இருக்க வேண்டும், இரு மொழிக் கொள்கையில் உறுதி இருக்க வேண்டும், சனாதனத்தை சமரசமின்றி எதிர்க்க வேண்டும். இவை அனைத்தையும் உள்ளடக்கிய கொள்கை வேண்டும் என்பன போன்ற பல்வேறு கருத்துக்கள் மக்கள் மத்தியிலும் அரசியல் வல்லுநர் மத்தியிலும் அள்ளி வீசப்பட்டு வருகின்றன.
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக தெரிவித்த பின்னர் உங்கள் கட்சியின் கொள்கை என்ன என நிருபர்கள் கேட்ட போது, “ கொள்கையா? எனக்கு தலையே சுத்திடுச்சு” என அவர் கூறியது போல், விஜயும் சொல்வாரானால், அரசியல் களத்துக்கு வருவதற்கு முன்னரே தூக்கி எறியப்படுவார் என்பதை விஜய் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அல்லது அதையும் கடந்து பல்வேறு நடிகர் அரசியலுக்கு வந்து காணமல் போனது போல் அல்லாமல் அவற்றை படிப்பினையாக கொண்டு எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது, எவற்றை கடந்து எப்படி சாதிக்க வேண்டும் என்பது குறித்து விஜய் தெள்ளத் தெளிவாக முடிவெடுத்து அரசியலில் கால் பதிபாரானால் அவருக்கான இடத்தை மக்கள் கொடுக்க தயாராகவே இருப்பார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.