கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கண்மணி. மத்திய அரசின் சிறந்த ஆய்வாளர் விருது பெற்ற இவரது கணவர் சேவியர் பாண்டியன் அரசு வழக்கறிஞராக உள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். அப்போது இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் தனிப்பிரிவு ஆய்வாளர் பணியில் இருந்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக மாற்றப்பட்டார்.
இந்நிலையில் இவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததை அடுத்து இன்று காலை முதல் நாகர்கோவிலில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி பீட்டர் பால் தலைமையில் 12 பேர் கொண்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து கண்மணி வீட்டிலும் அவருக்கு நெருக்கமான பெண் வீட்டிலும் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். கடந்த 20 மணி நேரம் நடந்த சோதனையில் ஆய்வாளர் கண்மணி தனது வருமானத்திற்கு அதிகமாக 171.78 % சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இவரது வீட்டில் நடந்த சோதனையின்போது 88 சவரன் தங்க நகைகள் சிக்கியது. 7 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வங்கி வைப்புத் தொகை 88 லட்சம் ரூபாய், வங்கி முதலீடு 3 லட்ச ரூபாய். என மொத்தம் ஒரு கோடியே 13 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை பெண் ஆய்வாளர் வீட்டில் எவ்வளவு சொத்துக்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது இப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.