நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், ’உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி’ என்ற முழக்கத்தை முன் வைத்து திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருப்பதால், உள்ளாட்சி தேர்தல் களத்தில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ‘வாஷ் அவுட்’ செய்ய வேண்டும் என்று களமாடிமாடிக்கொண்டிருக்கிறது.



 முதல்வர் மு.க.ஸ்டாலின்


இந்நிலையில், பிப்ரவரி 6ஆம் தேதி முதல் காணொலி மூலமாக தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,  இந்த 8 மாதத்தில் செய்த சாதனைகளையும் கடந்த திமுக ஆட்சி காலங்களில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் செய்த திட்டங்களையும் கூறி வாக்கு சேகரிப்பதோடு, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து பேசிவருகிறார். குறிப்பாக நீட் விவகாரத்தில் பாஜக – அதிமுக துரோகத்தால்தான் மாணவர்களை பலிகொடுக்க வேண்டியதாயிற்று என்று பேசிவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களையும் ஒவ்வொரு பிரச்சாரத்திலும் பட்டியலிட்டு வருகிறார்.


எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது நடைபெற்ற கிராமப்புற உள்ளாட்சி தேர்தலிலேயே ஆளுங்கட்சியான அதிமுகவை விட அதிக இடங்களை கைப்பற்றியது. இப்போது, ஆளுங்கட்சியாகவும் இருப்பதால் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த பரிசு இது என எதிர்க்கட்சிகளுக்கு மெய்ப்பிக்க வேண்டிய நிலை திமுகவிற்கு ஏற்பட்டிருக்கிறது.


இதனால், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே அனைத்து மாவட்ட செயலாளர்களிடம் பேசிய ஸ்டாலின், இது ‘பிரஸ்டிஜ் இஸ்சு’ நம்ம ஆளுங்கட்சியாக வேறு இருக்கிறோம். இந்த தேர்தலில் பெரிய அளவில் வெற்றியை பெற்று காட்டிவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதனால், ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் பொறுப்பளர்களும் தங்கள் மாவட்டத்தில் அதிக இடங்களை பிடித்து காட்டிவிடவேண்டும் என்ற ‘வெறியோடு’ வேலைப்பார்க்க தொடங்கினர்.


வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராமநாதபுரம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் செயலாளர்களும் / சில இடங்களில் பொறுப்பு அமைச்சர்களில் சிலரும் சரியாக வேலை பார்க்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகார் வந்திருக்கிறது. இதனால், கடும் கோபமடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை தனது திண்டுக்கல் பரப்புரை கூட்டத்தை முடித்த கையோடு, ஒவ்வொரு மாவட்ட செயலாளர்கள் / பொறுப்பாளர்கள், பொறுப்பு அமைச்சர்கள் என அத்தனை பேரையும் தனித்தனியாக தொலைபேசியில் அழைத்து பேசியிருக்கிறார்.


அப்போது, ’இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் உங்களது மாவட்டத்தில் அதிக அளவில் வெற்றியை பெற வேண்டும். அப்படி அதிக இடங்களை கைப்பற்றி காட்டுபவர்கள் மட்டும் அறிவாலயம் பக்கம் வாருங்கள், முடியாதவர்கள் அப்படியே போய்விடுங்கள்’ என கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதோடு, மாவட்டத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிடுபவர்களின் மாவட்ட செயலாளர் பொறுப்பும் அமைச்சர் பத்வியும் பறிக்கப்படும் என்றும் பேசியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிக இடங்களில் வென்று காட்டி அதிமுகவின் முகத்தில் கரியை பூச வேண்டும் என்றும் கொதித்திருக்கிறார்.


இதனால், சரியாக வேலை பார்க்காத மாவட்ட செயலாளர்கள் சிலரும் பொறுப்பு அமைச்சர்கள் சிலரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். நம்முடைய பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய அடுத்த விநாடியே தங்கள் மாவட்டத்தின் நிர்வாகிகளை அழைத்து தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டிருக்கின்றனர்.