VinFast MoU with Tamil Nadu: வின்ஃபாஸ்ட் நிறுவனம் முதற்கட்டமாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு, தமிழ்நாட்டில் நான்காயிரத்து 160 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு:
தமிழ்நாடு தொழில்துறையை மேம்படுத்துவதற்கும், புதிய முதலீடுகள் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும், இன்று தொடங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்று, புதிய முதலீட்டிற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர். அதில் ஒரு குறிப்பிடத்தக்க நிறுவனம் தான் வியட்நாமைச் சேர்ந்த மின்சார கார் உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட். 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடியில் அமைய உள்ள இந்நிறுவன தொழிற்சாலையின் மூலம் தமிழ்நாட்டில் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
வின்ஃபாஸ்ட் நிறுவனம்:
இந்த ஒப்பந்தத்தின் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் முதற்கட்டமாக, அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான்காயிரத்து 160 கோடி ரூபாயை முதலீடு செய்ய வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு 1,50,000 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும் வகையிலான, ஆலைக்கான கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுடன் விரைவாக இணைய, நாடு தழுவிய டீலர்ஷிப் நெட்வொர்க்கை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது உற்பத்தி மற்றும் விநியோக சேவையை தொடங்க உள்ளது. வின்ஃபாஸ்டின் இந்த நடவடிக்கை, உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் வளர்ச்சி வாய்ப்புகளை கைப்பற்றுவதையும், EV சந்தையை வேகமாக விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
யார் இந்த வின்ஃபாஸ்ட்:
வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்பது வியட்நாமை தளமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு வாகன நிறுவனமாகும். அந்நாட்டின் மிகப்பெரிய தனியார் குழுமமான Vingroup ஆல் கடந்த 2017ம் ஆண்டு இந்ந்றுவனம் தொடங்கப்பட்டது. உலகளாவிய சந்தையில் விரிவுபடுத்தப்படும் வியட்நாமை சேர்ந்த முதல் கார் நிறுவனமும் இதுதான். மின்சார கார் மட்டுமின்றி மின்சார ஸ்கூட்டர்கள், பேருந்துகள், பேட்டரி ஆகியவற்றை உற்பத்தி செய்வதோடு, சார்ஜிங் நிலையங்களையும் கட்டமைத்து தருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு சந்தைகளிலும் இந்நிறுவன கார் விற்பனை செய்யபப்ட்டு வருகிறது. 2024 மற்றும் 25 காலகட்டத்திற்குள், VF7, VinFast VF8, VinFast VF6, VinFast VF e34 ஆகிய கார் மாடல்கள் இந்திய சந்தைக்கும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள வின்ஃபாஸ்ட் நிறுவன காரின் குறைந்தபட்ச விலையே, 25 லட்ச ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வின்ஃபாஸ்ட் நிறுவனமும், தமிழக அரசும்:
தமிழ்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக, வின்ஃபாஸ்ட் குளோபல் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துணை CEO ட்ரான் மாய் ஹோவா பேசுகையில், "இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வின்ஃபாஸ்டின் நிலையான வளர்ச்சி மற்றும் பூஜ்ஜிய உமிழ்வு போக்குவரத்து எதிர்காலத்தின் பார்வைக்கு வலுவான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. தமிழ்நாட்டில் முதலீடு செய்வது இரு தரப்பினருக்கும் கணிசமான பொருளாதார பலன்களைத் தருவது மட்டுமல்லாமல், இந்தியாவிலும் பிராந்தியத்திலும் பசுமை ஆற்றல் மாற்றத்தை விரைவுபடுத்த உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பேசுகையில், “மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள், மாநிலத்தின் பசுமைப் பார்வைக்கு முக்கியமான பொருளாதார இயக்கிகள் மட்டுமல்ல, சக்திவாய்ந்த முன்னேற்றத்திற்கான அம்சங்களாகவும் உள்ளன. வின்ஃபாஸ்ட் அதன் ஒருங்கிணைந்த EV வசதியை நிறுவுவதற்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்யத் தேர்வு செய்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உறுதியான திறன்களையும், நிலையான எதிர்காலத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் கொண்டுள்ள வின்ஃபாஸ்ட் நம்பகமான பொருளாதார பங்காளிப்பாளராகவும், தமிழ்நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பாளராகவும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Car loan Information:
Calculate Car Loan EMI