Global Investor Meet: சென்னையில் இன்று தொடங்கியுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், தமிழ்நாட்டில் புதியதாக பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.


சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு:


தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தது முதலே, தொழில்துறையை வளப்படுத்துவது, புதிய முதலீடுகள் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்றவற்றில் தமிழ்நாடு அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.  குறிப்பாக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டது எல்லாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தான், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு,  நாளை வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் வெளிநாடுகளை சேர்ந்த பல நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய முதலீட்டாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் சில லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஈர்த்து, ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஒரு டிரில்லியன் பொருளாதாரம்:


2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரத்தை கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கொள்கையை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதன் ஒருபகுதியாக இந்த மாநாடு அமைய உள்ளது. இந்த மாநாட்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான செயல் திட்டத்தை வெளியிட்டு முதலமைச்சர் பேச உள்ளார். உலக முதலீட்டாளர் மாநாட்டின் வழியே அந்நிய முதலீடுகள் அதிகரிப்பதன் மூலம், உள்ளூர் பொருளாதார வளர்ச்சி மேம்படும். குறிப்பாக, தமிழ்நாட்டின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கு இது வழிவகுப்பதோடு, தனிநபர் வருமானத்தையும் அதிகரிக்கும்.


முக்கிய முதலீடுகள்:


சிங்கப்பூர், கொரியா, டென்மார்க் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களது தொழிலை தொடங்குவது மற்றும் விரிவாக்கம் செய்வதற்கான ஒப்பந்தங்கள் இந்த மாநாட்டில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசுக்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் இடையே ரூ31,000 கோடி மதிப்பிலான முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாக, இந்தியாவுக்கான ஜெனி சிங்கப்பூர் தூதரகம் அறிவித்திருக்கிறது. ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு செய்து,  ஐ-போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அடுத்து வரும் 6 ஆண்டுகளில் 30,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. வியட்நாம் நாட்டின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமாக வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டில் ரூ.16000 கோடி முதலீடு செய்ய உள்ளது. தூத்துக்குடியில் அமையவுள்ள இந்த தொழிற்சாலையின் மூலம் தமிழ்நாட்டில் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதேபோன்று ஹுண்டாய் கார் தயாரிப்பு, போயிங் விமான உதிரிபாகங்கள், கேப்லின் மருந்து தயாரிப்பு, செம்ப்கார்ப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை உள்ளிட்ட பல நிறுவனங்களும், தமிழக அரசு உடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.