கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கடைசியாக நடைபெற்ற இரண்டு மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. வரும் மே மாதத்துடன் பாஜக ஆட்சியின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து INDIA கூட்டணியை உருவாக்கின. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடிக்க தொடங்கிவிட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழா:
இந்த நிலையில், INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழா வரும் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடத்தப்படும் மாநாட்டுக்கு வெல்லும் சனநாயகம் மாநாடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அரசியலில் விடுதலை சிறுத்தைகள் இறங்கி 25ஆண்டுகள் ஆவதை குறிக்கும் விதமாக இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. அதுமட்டும் இன்றி அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், 60 வயது நிறைவு பெறுவதை முன்னிட்டு அதே நாளில் மணி விழாவாக கொண்டாட உள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி.
இந்த மாநாட்டின் மூலம் INDIA கூட்டணி, தங்களது நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளது. இந்த மாநாட்டில் INDIA கூட்டணியை சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
INDIA கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டு தரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி:
பல்வேறு மாநிலங்களில் INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த மாத இறுதியில், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை வெளியிடப்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
முடிந்தவரையில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் ஒரே வேட்பாளரை களமிறக்க INDIA கூட்டணி திட்டமிட்டு வருகிறது.
குறிப்பாக, இந்தியாவில் அரசியல் முக்கியத்தும் வாய்ந்த மாநிலமாக உள்ள தமிழ்நாட்டிலும் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. INDIA கூட்டணியை பொறுத்தவரை, தமிழ்நாட்டில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ள கூட்டணி, கடந்த தேர்தலை போல இந்த முறையும் பெரும்பாலான தொகுதிகளையும் கைப்பற்றும் என கூறப்படுகிறது. கடந்த முறை, தேனியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.