கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு தொடக்க விழாவில் கால் தடுமாறிய முதல்வர் ஸ்டாலினை, பிரதமர் மோடி தாங்கிப் பிடித்த நிகழ்வு நடந்தது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு:
பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இன்று மாலை 5.15 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரை அருகே உள்ள அடையாறு ஐஎன்எஸ் படைதளம் சென்ற பிரதமர், அங்கிருந்து கேலோ இந்தியா நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் சென்றார்.
அப்போது, இவருக்கு வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், தமிழக பாரம்பரியத்தின்படியும் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்த பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து, 'உளி ஓவியங்கள்’ என்ற புத்தகத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
தடுமாறிய முதல்வர்:
இந்த நிலையில், கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு தொடக்க விழாவில் கால் தடுமாறிய முதலமைச்சர் ஸ்டாலினை, பிரதமர் மோடி தாங்கிப் பிடித்த நிகழ்வு நடந்தது.
நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு வரும்போது முதல்வர் ஸ்டாலின் கால் தடுமாறி இருக்கிறார். அப்போது, உடன் வந்த பிரதமர் மோடி, ஸ்டாலினை கீழே விழாமல் கைத்தாங்கலாக தாங்கி பிடித்துக் கொண்டார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
போட்டி விவரங்கள்:
சென்னையில் முதன்முறயாக நடைபெற உள்ள இந்த கேலோ இந்தியா விளையாட்டில், தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி, வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.
முதன்முறையாக தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காட்சி விளையாட்டாக நடைபெறுவது (DEMO Sports) உட்பட மொத்தம் 27 விளையாட்டுகள் இடம் பெறுகின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொன்றும் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவை குறித்த விவரங்களை, விளையாட்டு ஆர்வலர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமமின்றி திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களிலும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் 5,500-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1,600க்-கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்கின்றனர்.
மேலும் படிக்க
CM Stalin: "விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை மாறுவதே இலக்கு" பிரதமர் முன்பு முதல்வர் ஸ்டாலின் உறுதி!
40-க்கு 40! வேகமெடுக்கும் திமுக...நாளை மறுநாள் முதல் பரப்புரை தொடக்கம்!