பிரபல நடிகரும், எழுத்தாளருமான பாரதி மணி புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் நேற்று காலமானார். பாபா, பாரதி மற்றும் புதுப்பேட்டை ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நன்கு அறிமுகமானவர் பாரதி மணி. அதற்கு முன்பாகவே அவர் டெல்லியில் பல மேடை நாடகங்களில் நடித்து புகழ் பெற்றவர். இது மட்டுமில்லாமல் இவர் எழுதிய பல நேரங்களில் பல மனிதர்கள் எனும் புத்தகம் இலக்கிய வாசகர்கள் இடையே பேசப்படும் இலக்கியமாக இருந்து வருகிறது.
பெண் கவிஞரும், சமூக ஆர்வலரும், தென்சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் தனது இரங்கல் குறிப்பில், "
'பாட்டையா' எனப் பாசமுடன் அழைக்கப் படும் பாரதிமணி அய்யா மறைந்து விட்டார். :( எத்தனை அற்புதமான மனிதர்! என்னைப் போல எத்தனையோ மனங்களில் தனித்ததொரு இடம் பிடித்து இரட்டணக்காலிட்டு அமர்ந்தவர்.
நாடெங்கும் சுற்றி வந்தாலும் நான் குமரியின் பார்வதிபுரத்து விதைதான் என்று தன் ஊரையும் தோளில் தூக்கிச் சுமந்தவர். மகனாய், தம்பியாய், கணவனாய், மருமகனாய், தகப்பனாய், தாத்தாவாய், நாடக நடிகனாய், திரைப்படங்களிலும் பல வேடங்கள் தரித்தவர். ஓர் எழுத்தாளராகவும் தன் அனுபவங்களை, "புள்ளிகள் கோடுகள் கோலங்கள்" என்று தீட்டியவர். எளிமைதான் இவரது பலம். எளிய மனிதர்களுடனான இவரது பிணைப்பும், மிகப் பெரிய அந்தஸ்த்துக்காரர்களைத் தாமரை இலைத் தண்ணீரெனக் கடத்தலுமே இவரது அறம். வாழ்வையே கலையாகச் சுவைத்தலே இவரது ஆன்ம ரஸம்.
தாம் வாழ்ந்த அனுபவத்தின் நிறைகடலைத் தளும்பாமல் உள்ளன்போடு உள்ளங்கையில் தருபவர். செழுமையடைந்த ஒரு மனித மனத்தின் கனிவையும் நிறைவையும் கலையின்வழி வாழ்வைத் துய்த்த பூரணத்தையும் ஒருசேர ஒரு மனிதரிடத்திலே நான் கண்டு வியக்கிறேனென்றால் - அது இவரிடத்தேதான் - 'A Wholesome Man!'.அவரோடு அதிகம் பழகச் சந்தர்பங்களில்லை எனக்கு - ஆனால், ஆர்வமும், அன்பும், அக்கறையும் துலங்க என்னை அணைக்கின்ற அந்த ஒரு அணைப்பில் உண்மையான வாஞ்சையும் ஆதுரமும் புலப்படும். அவருடனான ஒவ்வொரு சந்திப்பும் வாழ்வின் மீதான நம்பிக்கையைத் திரி தூண்டிவிடும் அற்புத நிமிடங்கள்.
வெடித்துச் சிரிக்கும் அவர் பேச்சும் குரலும் இன்றில்லை -அநேக சந்தர்ப்பங்களில் அவர் தன்னைக் குறித்துச் சொல்லிக்கொள்ளும் "I am a blessed soul!" என்ற சொற்றொடரை மனதில் கொள்கிறேன். அவரை நான் எப்போதும் 'Lovable Rascal ' என உரிமையுடன் அழைப்பதை மிக ரசித்துச் சிரிப்பார்.
வயது, பால் பேதமற்ற, எண்ணி முடியாத அவரது நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், அய்யாவின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். You will be dearly missed my "lovable Rascal".
இவ்வாறு, தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்